கல்-எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரி: சொத்துக்களை வக்ப் செய்வதற்கு நிர்வாகம் ஆட்சேபனம்
(எப்.அய்னா)
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரத்தில், அக்கல்லூரி பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் வக்ப் சொத்துக்களாக பதிவு செய்ய, அக்கல்லூரியின் தற்போதைய நிர்வாகம் ஆட்சேபனம் வெளியிட்டுள்ளது. கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகார சொத்துக்கள் தொடர்பில் வக்ப் சபையில் இடம்பெறும் விசாரணைகளின் போது, கடந்த வாரம் இந்த ஆட்சேபனங்களை தாக்கல் செய்ய, கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுமதி கோரியுள்ளார்.
முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்கு என உருவாக்கப்பட்ட, பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட சட்டம் ஊடாக குறிக்கோள்களுக்குள் அடங்கும் இக்கல்லூரியினதும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதி செய்யக் கோரி கடந்த 2024 பெப்ரவரி 6ஆம் திகதி முஸ்லிம் அலுவலக பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருக்கு அளித்த எழுத்து மூல முறைப்பாட்டுக்கு அமைய, டப்ளியூ.பி/10198/2025 எனும் மனு வக்ப் சபையால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் பழைய மாணவிகள், குறித்த கல்லூரி நிர்வாகத்துக்கு உரிமை கோரும் இதற்கு முன்னர் இருந்த நிர்வாக சபையின் உறுப்பினர்கள் சிலர், நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் இணைந்து இம்மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மனுவில், தற்போதைய நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த வாரம் புதன்கிழமை, இம்மனு தொடர்பில் வக்ப் சபை தலைவர் மொஹிதீன் ஹுசைன் தலைமையிலான சட்டத்தரணி மதீன், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மஹீல் டூல், முஸ்தபா ராசா உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, மனுதாரர் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான வசீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
பிரதிவாதிகளின் சிலருக்காக சட்டத்தரணி ரியாஸ் ஆஜரானார்.
இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவால் வழங்கப்பட்டுள்ள, மருதானை சின்னப்பள்ளிவாசல் வழக்கு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்களை மையப்படுத்தி மனுதாரர் தரப்பில், கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் வக்ப் சொத்துக்களாக பதிவு செய்யப்படல் வேண்டும் எனவும் அதற்கான உத்தரவை வக்ப் சபை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
எனினும் இதன்போது பிரதிவாதிகளுக்காக ஆஜராகியுள்ள சட்டத்தரணி ரியாஸ், குறித்த சொத்துக்களை வக்ப் சொத்துக்களாக அங்கீகரிப்பதை ஆட்சேபித்துள்ளதுடன், அது தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை முன் வைக்க பிறிதொரு திகதியை கோரியுள்ளார்.
இதனை ஆராய்ந்த வக்ப் சபை, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி சொத்துக்களை வக்ப் செய்யக் கூடாது என்பதற்கான நியாயங்கள் இருப்பின் அவற்றை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன் இது குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி விசாரணை செய்ய தீர்மானித்தது.
இதேவேளை, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரத்தில் அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தற்போதைய நிர்வாகத்துக்கு எதிரான சில தடை உத்தரவுகள் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கம்பஹா மாவட்ட சிவில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
அத்துடன் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரத்தில், அக்கல்லூரியில் கற்கும் மாணவர்களின் உள்ளக பரீட்சாத்திகளாக பரீட்சைக்கு தோற்றும் உரிமை, இலவச பாடப்புத்தகம் மற்றும் இலவச சீருடை உரிமையை தற்போதைய நிர்வாகம் விட்டுக் கொடுத்துள்ளதாகவும், அவற்றை தொடர்ந்து அக்கல்லூரி மாணவிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றிலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு அம்மனுவும் நிலுவையில் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.- Vidivelli
Post a Comment