Header Ads



மன்னார் துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன..? இதுவரை 7 பேர் கொலை


(தமிழ் மிரர்)


மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதன்படி, நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர். 


இதற்கமைய, மன்னார் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று உயிரிழந்தனர். 


இதன்போது நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். 


காயமடைந்தவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 2022ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 


2022ஆம் ஆண்டு ஜுலை எட்டாம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 


அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.


உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் என்றும், அவரது தரப்பினரே இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 


குறித்த நபரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.