Header Ads



தடுத்து வைக்கப்பட்டுள்ள 4,000 மெட்ரிக் தொன் அரிசி


தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும் சுங்கத்தில் இருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.


நாட்டில் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரச வணிக இதர கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் துறைக்கும் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அந்தக் காலக்கெடு கடந்த 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.


அந்தக் காலகட்டத்தில், தனியார் துறையும் அரசாங்கமும் 167,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இருப்பினும், குறித்த காலவகாசம் நிறைவடைந்த பின்னர் அரசு மற்றும் தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக  சீவலி அருகொட குறிப்பிட்டார்.


அதில் அரசாங்கத்திற்குச் சொந்தமான 4,000 மெட்ரிக் தொன் அரிசி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பை விடுவிப்பது குறித்து அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.