அரிசி சர்ச்சை தொடருகிறது - தட்டுப்பாடு என்ற பேச்சுக்களுக்கு 3 வாரங்களில் முற்றுப்புள்ளி என்கிறது அரசாங்கம்
நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு சில தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம் நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சிவப்பு அரிசி உள்ளிட்ட பல அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
இந்தநிலையில், கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்ய முடியாதமையினால் அரிசி வர்த்தகத்தில் இருந்து விலக நேர்ந்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியை 150 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான இயலுமை உள்ள போதிலும் அரசாங்கம் வரி விதிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபாயினை அரசாங்கம் வரியாக அறவிடுகிறது.
நேற்று வரையில் 88 ,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனூடாக 5.7 பில்லியன் ரூபாயினை அரசாங்கம் வருமானமாக ஈட்டியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரிசி தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லில் மூன்றில் ஒரு பகுதியை அரசாங்கம் கொள்வனவு செய்யும் அதேவேளை, நெல்லுக்கான நியாயமான விலையொன்றும் நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்களுக்கு 3 வாரங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment