Header Ads



25 அமைப்புகள் அநுரகுமாரவிற்கு அனுப்பியுள்ள கடிதம்


25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.


குறிப்பாக உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கடிதம், 2005 இல் ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை மற்றும் 2010 இல் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தியிருந்தது.


ஊடக சுதந்திரத்தை நசுக்கப் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின.


“நிகழ்நிலைப் பதிவுகளின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ள ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்வதன் மூலம் கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் மீது சாதகமான விளைவை உருவாக்க வழி வகுக்க வேண்டும்.


அமைதியான நிகழ்நிலை பேச்சு சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமையில் தவறான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதற்குப் பதிலாக, துன்புறுத்தல் மற்றும் மோசடி போன்ற உண்மையான ஒன்லைன் ஆபத்துகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்துடன் சட்டம் மாற்றப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜனாதிபதி திஸாநாயக்கவின் தலைமைத்துவமானது, இலங்கையின் நீண்டகால பிரச்சினைகளான தண்டனையிலிருந்து விடுபடுதல் மற்றும் ஊடக உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவ் அமைப்புகள் உறுதியளித்தன.

No comments

Powered by Blogger.