கலாநிதிப் பட்டம் பெற்ற 19 பிள்ளைகளின் தாய்
(எம்.ஐ.அப்துல் நஸார்)
சவூதி அரேபியாவில் 19 பிள்ளைகளின் தாயான ஹம்தா அல் றுவாலி தனது பெரிய குடும்பத்தினை பாரமரித்துக்கொண்டு தனது கல்விக் கனவான கலாநிதிப் பட்டத்தினைப் பெற்று அசாதாரண சாதனையொன்றினைப் படைத்துள்ளார்.
40 ஆவது வயதுகளில் இருக்கும் ஹம்தா சவூதி அரேபிய தொலைக்காட்சி அவைரிசையான அல் எக்பாரியாவுக்கு வழங்கிய நேர்காணலில ஒரு தாயாக இருந்துகொண்டு தொழில்சார் கடமைகளையும் கல்விச் செயற்பாடுகளை எவ்வாறு சமநிலையாக பேணி வந்தார் என்ற இரகசியத்தை வெளிப்படுத்தினார். பத்து ஆண் பிள்ளைகளினதும் ஒன்பது பெண் பிள்ளைகளினதும் தாயான அவர் தனது வெற்றிக்கான பயணத்தில் துல்லியமான திட்டமிடலையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பினையும் வழித்துணையாகக் கொண்டிருந்தார்.
குழப்பங்களையும் அலங்கோலங்களையும் நான் ஒருபோதும் விரும்புவதில்லை. அதனால் நான் எனது நாளை மிகக் கவனமாகத் திட்டமிடுகின்றேன் என ஹம்தா தெரிவித்தார். அவர் தனது பகல் பொழுதினை பணிகளுக்காகவம் பிள்ளைகளைப் பராமரிப்பதாகவும் புத்திசாதுரியமாகப் பிரிக்கின்றார். தனது மாலைப் பொழுதினை இலத்திரனியல் வர்த்தகத்திற்காகவும் கல்விக்காகவும் ஒதுக்குகின்றார்.
ஹம்தா தற்போது மனநல சுகாதாரப் பிரிவில் நிருவாகப் பதவியினை வகிக்கும் அதேவேளை இணையத்தளத்தில் வர்த்தக செயற்பாட்டினை வெற்றிகரமாகவும் முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக, அவர் தனது 43 வயதிற்கு முன்னதாக பட்டப்படிப்பு, முதுமாணி கற்கை மற்றும் காலாநிதிக் கற்கைகளைப் பூர்த்தி செய்தார் தற்போது தனது ஆய்வுக் கட்டுரை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
பெரிய குடும்பமொன்றை பராமரிக்கும் சவால்களுக்கு மத்தியிலும், பரபரப்பான வகுப்பறையினைப் கையாளும் ஆசிரியர்களிடமிருந்தும் இராணுவத்திற்கு தலைமைதாங்கும் இராணுவ அதிகாரிகளிடமிருந்தும் தனக்கான முன்மாதிரியினைப் கற்றுக் கொள்கின்றார். 'என்னைப் பொறுத்தவரை, ஒரு பிள்ளையை வளர்ப்பதென்பது 10 பிள்ளைகளை வளர்ப்பதெடுப்பதற்கு சமமானதாகும். நான் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றேன், அவர்களது இலக்குகளை அடைந்துகொள்ள உதவுகின்றேன் அத்தோடு அவர்களது பொழுதுபோக்கு செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கின்றேன்.' என விளக்கமளித்தார்.
அவரது அர்ப்பணிப்பு பிள்ளைகளை கல்வியில் கரை சேர்ப்பது வரை நீண்டு செல்கின்றது. தனது பிள்ளைகள் 98 வீதம் தொக்கம் 100 வீதம் வரையான புள்ளிகளைப் பெறுவதாக ஹம்தா பெருமையுடன் நினைவுகூர்ந்ததோடு ' நானும் எனது கல்விக் கனவை ஒருபோதும் கைவிட்டதில்லை' எனவும் தெரிவித்தார்.
'அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், இந்த வெற்றி என்பது இலகுவான ஒன்றல்ல, மிகவும் கவனமான திட்டமிடல் மற்றும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இதற்கு காரணமாக அமைந்தது.'
ஹம்தா அல் றுவாலியின் முன்னுதாரணமிக்க இப் பயணம் ஒருவரின் இலக்குகள் எய்தப்படுவதற்கு விடாமுயற்சி, காத்திரமான நேர முகாமைத்துவம் மற்றும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பின் பலம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் சாட்சியாகக் காணப்படுகின்றது.
Post a Comment