Header Ads



அமைச்சரிடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் தென்னகோன்


முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக , பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவிடமிருந்து ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.


ஜனவரி 9, 2024 அன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​“அனசிகலவுக்கு (தாவரப் பெயர்) உண்மையில் என்ன நடக்கிறது?” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


இந்த நிகழ்வின் போது, ​​அமைச்சர் வித்யாரத்ன, சட்டவிரோத அரச காணி அபகரிப்பு மற்றும் ஏனைய ஊழல் நடவடிக்கைகளுடன் தென்னகோனை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. தென்னகோனை நேரடியாகப் பெயரிட்டதாகக் கூறப்படும் இந்த கருத்துகள், அவரது நற்பெயருக்கு "பிழையான, அவதூறு மற்றும் சேதம் விளைவிக்கும்" என நஷ்டஈடு கோரும் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.


தென்னகோனின் சட்டப் பிரதிநிதியான சட்டத்தரணி எச்.டி.சி.டி. ஹத்துருசிங்கவினால் அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதம், அமைச்சரின் கருத்துக்கள் தென்னகோன் மீது எதிர்மறையான கருத்தை உருவாக்கி, அவரது நற்பெயருக்கும், பண்புக்கும், கண்ணியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் அரச அதிகாரியும், தற்போதைய பிரபல பொது விமர்சகருமான தென்னகோன், வித்யாரத்னவின் அறிக்கைகளால் தனது நற்பெயர் மற்றும் தொழில் நிலைப்பாட்டிற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.


ஏற்படுத்திய சேதங்களுக்காக அமைச்சர் வித்யாரத்ன தனிப்பட்ட முறையில் 14 நாட்களுக்குள் ரூ.100 மில்லியன் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் அதற்கு இணங்கத் தவறினால், வட்டி மற்றும் சட்டச் செலவுகளுடன் தொகையை மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.