இஸ்ரேலில் இல்லாமல் போன இலங்கையர்களுக்கான 10,000 தொழில் வாய்ப்புக்கள்
(எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த அரசாங்க காலத்தில் அரசியல்வாதிகளால் தகுதியற்ற நபர்கள் இஸ்ரேலில் விவசாய தொழிலுக்கு அனுப்பட்டுள்ளதால் குறித்த நபர்கள் அந்த தொழில் நிறுவனங்களில் இருந்து தப்பிச்சென்று வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதன் காரணமாக இஸ்ரேலில் விவசாய துறையில் 10ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்லேலில் விவசாய தொழிலுக்கு எந்த தகுதியும் இல்லாத நபர்களை கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் அனுப்பியுள்ளனர். அதனால் குறித்த நபர்கள் அவர்கள் தொழில் புரிந்த இடங்களில் இருந்து தப்பிச்சென்று வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதால், இஸ்ரேலில் விவசாய துறையில் 10ஆயிரம் தொழில் கோட்டா எமது நாட்டுக்கு இல்லாமல் போயுள்ளது.
அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்கி பணம் பெற்று இரண்டு வருடங்களாக 5ஆயிரம் பேர் வரை வெளிநாட்டு தொழிலுக்கா காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் முறையற்றவகையில் நபர்களை ஒவ்வொரு இடத்தில் இருந்து அழைத்துவந்து வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
பணியத்துக்கும் அழுத்தங்களை பிரயோகித்து அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையானவர்களை இவ்வாறு அனுப்பி இருக்கிறார்கள். இவ்வாறு செயற்பட்டால் நாடு என்றவகையில் நாங்கள் அவ்வாறு தொழில் சந்தையை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால் இதுதொடர்பில் நாங்கள் முறையான நடவடிக்கை எடுப்போம்.
கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப 10ஆயிரம் வரையான கோட்ட கிடைத்தது. அதில் 2ஆயிரம் பேர் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். என்றாலும் எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாமல், தகுதியற்ற தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பியதால், அவர்கள் தங்களின் தொழிலை மேற்கொள்ளாமல் சேவை நிலையங்களில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் தொழில் செய்யும் பின்னணி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விவசாய தாெழில் கோட்டாவை நிறுத்துவதற்கு இஸ்ரேலில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த தாெழில் வாய்ப்பை எவ்வாறு மீண்டும் பெற்றுக்கொள்வது என நாங்கள் தீவிரமாக கலந்துரையாடி இருந்தாேம். இதன்போது இந்த தொழில்களுக்கு தகுதியான அதற்கு ஏற்புடைய உடல் தகுதியுள்ள தொழிலாளர்களை அனுப்புவதாக இருந்தால் மீண்டும் அந்த தொழில் கோட்டாவை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என அவர்கள் தெரிவித்தார்கள்.
அதனால் நாங்கள் இலங்கை இராணுவம் மற்றும் சுகாதார துறையுடன் இணைந்து சுகாதாரம் தொடர்பில் இருக்கவேண்டிய விடயங்களை முறையான ஒழுங்கின் கீழ் மேற்கொண்டு வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு, நபர்களை ஒன்றை மாத காலமாக நாங்கள் அறிவுறுத்தினோம்.
அதன் பிரகாரம் அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி இந்த தொழில் கோட்டாவை பெற்றுக்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தீர்மானித்துள்ளோம். அதன் பிரகாரம் எமது வேலைத்திட்டத்தை செயற்படுத்த இந்த தொழில் விண்ணப்பதாரிகளை அழைத்து அவர்களை அறிவுறுத்தும் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தினோம்.
தொழில் வாய்ப்புக்களை மீள பெற்றுக்கொள்ளவதாக இருந்தால் இவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்த தொழில் வாய்ப்பு இல்லாமல் போகும் என்றார்.
Post a Comment