Header Ads



கிழக்கு ஆளுநரை சந்தித்து இம்ரான் Mp செய்த முறைப்பாடுகள்


கிழக்கு மாகாண கல்வித் துறையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க  நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்று (11)ஆளுநரை சந்தித்து உரையாற்றும் போதே இந்த கோரிக்கை விடுத்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , 


கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் பணி புரியும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் வெளிநாட்டு விடுமுறை மற்றும் வெளிநாடுகளின் சமய யாத்திரைக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதி உரிய காலத்தில் வழங்கப்படாததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது


வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக உரிய திகதிக்கு சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தாலும் அனுமதி உரிய காலங்களில் வழங்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகின்றது.  அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள் தொடர்ந்து கடமைக்குச் செல்கின்றனர். எனினும், இவர்கள் விண்ணப்பித்த லீவுத் திகதியிலிருந்து வலயக் கல்வி அலுவலகங்களினால் சம்பளம் இடைநிறுத்தப் படுகின்றது. நிர்வாகச் சீர்கேடுகளினால் இந்த அசௌகரியம் ஏற்படுகின்றது.


இவ்வாறு விண்ணப்பித்தவர்களின் கோவைகள் மாதக் கணக்கில் மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சில் தேங்கியிருப்பதாகவும் இதனை விரைவு படுத்த இலஞ்சம் எதிர்பார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோல வெளிநாட்டு லீவு அனுமதியிலும் பாரபட்சம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


எனவே, தயவு செய்து இதன் உண்மைத் தன்மைகளை அறியும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.