Header Ads



JVP - NPP இடையில் வேறுபாடுகள், இந்தியாவின் விருப்பத்திற்காக மாகாணத் தேர்தல் நடத்தக்கூடாது


 இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின்போது மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும்.


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.


ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது.


மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.


புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும்.


ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் சரத் வீரசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.