Header Ads



JVP யும், NPP யும் ஒன்றுதான் என டில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல


 மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம் என்ற பழைய ஜேவிபியின் கொள்கை நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அதை அகற்ற ஆணை தந்துள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தி நினைக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,


மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாக கூறியுள்ளதுடன் இன்னமும் தமிழ் தலைவர்களிடமும் அவர் இந்த கருத்தை கூறி இருப்பதை நான் அறிவேன்.


இப்போது மாகாணசபையை அகற்றி விட்டு அதற்கு பதில் நாடு தழுவிய, சம உரிமையை தருவோம்” என தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறுகிறார்கள். சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சம உரிமை என்பது வேறு. அதிகார பகிர்வு என்பது வேறு.


மாகாணசபையை அகற்றுவது பற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூற பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை வட மாகாண மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைத்துள்ளமையால் இவ்வாறு நினைத்துள்ளார்கள். சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சுலபமான காரியம் அல்ல. இன, மத, மொழி ரீதியாக சம உரிமைகள் இந்நாட்டில் உறுதிப்படுத்த இன்னமும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.


இங்கே இன்று அரசியலமைப்பிலேயே, இந்நாட்டின் மொழிகள். மதங்கள் மத்தியில் சம உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை. அரச மதமான பெளத்த மதத்துடன் பெளத்த தேரர்கள், இந்நாட்டின் அதிகார மையத்தில் இருக்கிறார்கள். மொழி தொடர்பில் சில பலவீனமான சட்டங்கள் ஆங்காங்கே இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இந்நாட்டின் அரச அதிகார வர்க்கம் இடம் கொடுப்பதில்லை.


நல்லாட்சியின் போது, புதிய அரசியலைமைப்பு உருவாக்கும் முயற்சி நடந்த நிலையில் அதற்கான வழிகாட்டல் குழுவில் இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கத்துவம் பெற்று பணியாற்றினார். ஆகவே அத்தகைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, இவை பற்றி சிநேகபூர்வகமாக கலந்து பேசி, வாத, விவாதம் செய்து, தீர்மானங்களுக்கு வரலாம்.


ஆனால், இப்போதே அவசரப்பட்டு, “மாகாணசபையை அகற்றியே தீருவோம். அது ஜேவிபியின் கொள்கை. அது மாறவில்லை. ஜேவிபியும், தேசிய மக்கள் சக்தியும் ஒன்றுதான்” என ஒருதலைபட்சமாக ஜேவிபியின் பொது செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) கூறுவது ஏற்புடையதல்ல  என்றார்.

No comments

Powered by Blogger.