முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களது வாக்குகள் - மக்களது மாற்றத்தை காட்டுகிறது - டில்வின்
தூதுக்குழுவில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷேக் எஸ்.எச்.எம். ஃபளீல், அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரான் நாட்டுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய ஷூரா சபையின் முன்னாள் உபதலைவர்களில் ஒருவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஷூர் மற்றும் சபையின் தற்போதைய துணைத் தலைவர், சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவர், மூத்த வழக்கறிஞர் ஜாவித் யூசுப் ஆகியோர் அங்கம் வகித்தனர். சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய மக்கள் சக்தி(NPP)யின் செயற்குழு மற்றும் வழிநடத்தல் குழு உறுப்பினர் அஷ்ஷேக் ஐ.என்.இக்ராம் அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்:
1. முஸ்லிம் அமைச்சர் நியமன விவகாரம்
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதற்கு காரணம் முஸ்லிம்களுடைய விவகாரங்களை அணுகுவதற்கும் அவற்றிற்காக குரல் கொடுப்பதற்கும் அமைச்சரவை மட்டத்தில் முஸ்லிம்கள் இருப்பது பொருத்தம் என்று கருதுவதாகும் என்றும் தற்போதைய சூழலில் அப்படியான நிலை இல்லை என்றும் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் அரசு இயந்திரத்தில் இருக்க வேண்டும் என்றும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
2. ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது
முஸ்லிம்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அரசு எந்தவொரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் போன்றோரது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
3. நிபுணத்துவத்தை பெற்றுக் கொடுத்தல்
முஸ்லிம் சமூகத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் மிக்க, சமூக ஆர்வம் கொண்ட புத்திஜீவிகள் கணிசமான தொகையினர் இருப்பதாகவும் அவர்களது ஆலோசனைகளை நாட்டின் வளர்ச்சிக்கு பெற்றுத் தருவதற்கு தேசிய ஷூரா சபை தயாராக இருப்பதாகவும் குழுவினர் வலியுறுத்தினர்.
4. பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல்
இலங்கை தேசம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் உறுதியளித்ததுடன், அரபு இஸ்லாமிய நாடுகளுடனான தொடர்பை மென்மேலும் வலுப்படுத்தி அந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் இது தொடர்பில் அந்த நாடுகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோர் அரசுக்குத் தேவையான ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் வழங்க முடியும் என்றும் கூறினர். அரபு, இஸ்லாமிய நாடுகளில் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர் தொழில் செய்கின்றனர். இதனால் வருடாந்த வெளிநாட்டுச் செலாவணியாகிய 6 பில்லியன் அமெரிக்க டொலரில் 85% க்கும் அதிகமான தொகைப் பணம் கிடைத்து வருவதால் அந்த நாடுகளுடனான நல்லுறவினதும் தொடர்பினதும் முக்கியத்துவத்தை குழுவினர் வலியுறுத்தினர்.
5. முஸ்லிம்கள் நாட்டுக்கு விசுவாசமானவர்கள்
இலங்கை தேசத்தின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு என்பன பேணப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் எப்போதும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் முஸ்லிம்கள் நாட்டுக்கு விசுவாசமானவர்கள் என்பதையும் கடந்த காலங்களில் பிரிவினை வாதத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்காததன் காரணமாக குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் பல்வேறுபட்ட துன்பங்களுக்கு உள்ளானது பற்றியும் தற்போதும் கூட கணிசமான தொகையினர் அகதி முகாம்களில் வாழ்வதையும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.
6. இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பாராட்டல்
முப்பது வருட யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் பாரிய அளவு பாதிக்கப்பட்டிருப்பதையும் இனவாதம் இந்த நாட்டுக்கு ஒரு பேராபத்து என்பதையும் குழுவினர் சுட்டிக்காட்டியதுடன் தேசிய மக்கள் சக்தியின் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும் பாராட்டினர். கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அல்லாமல் கல்வி, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.
7. சமாதான சகவாழ்வு வேலை திட்டங்கள்
இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் முஸ்லிம் சமூகத்தை இது தொடர்பாக நெறிப்படுத்தவும் வலுவூட்டவும் கடந்த காலங்களில் தேசிய ஷூரா சபை கணிசமான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக நினைவுபடுத்திய குழுவினர், குறிப்பாக தற்போது பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ்ஷைக் முனீர் முளப்பர் அவர்கள் சமாதான சகவாழ்வு வேலைத் திட்டங்களுக்காக தேசிய ஷூரா சபையுடன் கடந்த காலங்களில் மிக நெருக்கமாக இருந்து செயல்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் இது போன்ற வேலைத்திட்டங்களை எதிர்காலத்திலும் செயல்படுத்துவதற்கு ஷூரா சபை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
8. தேசிய ஷூரா சபை பற்றிய அறிமுகம்
தேசிய ஷூரா சபையின் நோக்கங்கள், இலக்குகள்,அதன் கட்டமைப்பு,கடந்த கால செயற்பாடுகள் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்கிய குழுவினர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தோடு தொடர்பான 27 அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தேசிய மக்கள் சக்தி அமைப்புக்கு கையளித்தமையை நினைவுபடுத்தியதுடன் அதில் உள்ளடங்கிய அம்சங்கள் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்கு சபை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்த மனுவின் பிரதி ஒன்றையும் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவருக்கு ஷூரா சபை அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் பிரதியையும் ஷூரா சபை பற்றிய அறிமுகத்தை கொண்ட ஓர் ஆவணத்தையும் உள்ளடக்கிய கோப்பொன்றை குழுவினர் டில்வின் சில்வாவிடம் கையளித்தனர்.
9. ஜே.வி.பி செயலாளரின் பதில்:
குழுவினரது கருத்துக்களை செவிமடுத்த செயலாளர் இந்த அரசு இன ரீதியான அடிப்படையில் எதனையும் நோக்குவதில்லை என்றும் இனவாதத்தை அது கடுமையாக எதிர்க்கிறது என்றும் குறிப்பாக அண்மைக் காலத்தில் மூவர் இனவாதத்தை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டதையும் நினைவூட்டினார். ஒவ்வொரு இனத்தினதும் சமயம், மொழி, குறிப்பாக ஆடைக் கலாசாரம் போன்ற தனித்துவங்களில் இந்த அரசு தலையிடமாட்டாது என்பதையும் அவற்றை பாதுகாப்பதற்காக அது எப்போதும் முன்னிற்கும் என்பதையும் வலியுறுத்தினார்.
கடந்த தேர்தலில் அனைத்து இனத்தவர்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித வேறுபாடுகளையும் பார்க்காமல் வாக்களித்திருப்பதை குறிப்பிட்ட அவர், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமது கட்சி பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது என்றும் எதிர்பாராத இடங்களில் கூட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களது வாக்குகள் கிடைத்திருப்பதானது மக்களது மனப்பாங்கில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஷூரா சபை உறுப்பினர்களுடன் தான் இதற்கு முன்னரும் அவ்வப்போது சந்தித்திருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதியமைச்சர் முனீர் முளப்ஃபர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
- Vidivelli -
Post a Comment