Header Ads



அரசாங்கத்திடம் சாமர சம்பத் கேட்ட அசத்தலான கேள்வி


சர்வதேச நாணய நிதியம் அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி குறித்து zoom செயலியின் மூலமாக விவாதம் நடத்த ஒப்புக்கொண்ட போதிலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பெரும் தொகையை செலவிட்டு வொஷிங்டனுக்கு சென்றது ஏன் என்று எதிர்க்கட்சி எம்.பி சாமர சம்பத் இன்று (17) கேள்வி எழுப்பினார்.


வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நான்கு அதிகாரிகளும் மத்திய வங்கியின் ஐந்து அதிகாரிகளும் கலந்துகொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கான தீர்மானம் அரசாங்கம் மற்றும் IMF இடையே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.


கலந்துரையாடல்களின் சிக்கலான தன்மை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் நடத்த திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக வொஷிங்டன் கலந்துரையாடலில் பங்கேற்க அரசாங்கம் தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார்.


கலந்துரையாடலின் ஒரு பகுதியை வொஷிங்டனில் நடத்த சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் ஒப்புக்கொண்டதாகவும், மற்றைய பாதி கலந்துரையாடல்களுக்கு IMF குழு இலங்கைக்கு வர ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.


பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தூதுக்குழுவினரின் விமான செலவுக்காக ரூ. 7.05 மில்லியன் செலவிடப்பட்டதாகவும் 38,587 ஐக்கிய அமரிக்க டொலர்கள் பயண செலவுக்கு செலவிடப்பட்டதாகவும் கூறினார்.


பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தின் மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிதி அமைச்சின் அதிகாரிகள் விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்தார்.

No comments

Powered by Blogger.