Header Ads



இன்று இந்தியா செல்கிறார் ஜனாதிபதி


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கிறார்.


அவர் இன்று  (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.


இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.


அதன்படி, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.


இந்திய அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.


அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.


இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) கடல் மார்க்கமாக இந்தியாவின் மிகவும் நெருங்கிய அயலுறவாக உள்ள இலங்கையானது, இந்தியப் பிரதமரின் சாகர் நோக்கு ( பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் செழுமையும்) மற்றும் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் முக்கிய இடத்தினைக் கொண்டிருப்பதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.


இதேவேளை, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

No comments

Powered by Blogger.