இலங்கையர்கள் மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள் - முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர்
ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய அரசமுறை விஜயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் குறிப்பிடத்தக்கதொரு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் அண்மையிலேயே நடைப்பெற்று முடிந்திருக்கின்றன.
அத்தோடு தற்போது ஆட்சிபீடம் ஏறியிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பின்னணியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது.
அத்தோடு 1987மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை மற்றும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பவற்றுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா மிக முக்கிய அயலக நாடு என்பதை புரிந்துக் கொண்டிருப்பதும், அவரது பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்தமையும் மிக முக்கியமானதாகும்.
இவ்விஜயத்தை அடுத்து வெளியிடப்பட்ட இலங்கை - இந்திய கூட்டறிக்கை மிக முக்கியமானது. ஏனெனில் அது கடந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும் என்னை பொறுத்தமட்டில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயமே, அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக தென்பட்டது.
ஏனெனில் நானறிந்தவரை 1987 ஆம் ஆண்டின் பின்னர் இவ்விடயம் குறித்து இந்தளவுக்கு தெளிவாக இலங்கை - இந்திய கூட்டறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை.
அடுத்ததாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாம் எட்கா ஒப்பந்தமாக விரிவுப்படுத்த முற்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை.
ஏனெனில் தலைமைத்துவங்கள் பொருளாதார ரீதியில் சிந்தித்ததை விட அரசியல் ரீதியிலேயே சிந்தித்ததாக நான் கருதுகிறேன்.
அவ்வொப்பந்தத்தின் ஊடாக எமது உற்பத்திகளுக்கு இடமிருக்காது எனவும், இந்திய வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்றுறையினரின் ஆக்கிரமிப்பு இருக்குமெனவும் ஒரு அச்சம் தோற்றுவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தியா அதன் அடைவுகளை அயலக நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறது.அதில் இலங்கைக்கு எப்போதும் தனியிடம் உண்டு.
அதேவேளை ஜனாதிபதியின் உரைகளில் பல்வேறு முக்கிய விடயங்கள் இடம்பிடித்திருந்தன.குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக இலங்கையில் எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறுவதற்கு தாம் அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் கூறியிருந்தார். இது மிக முக்கியமானதாகும்.
இது எவ்வாறு இருப்பினும் பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கதொரு விடயமாகவே இருக்கும்.
ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என்றார்.
(வீரகேசரி)
Post a Comment