நிந்தவூரில் அனாதைச் சிறுவர்களுக்கான முன்மாதிரி நடவடிக்கை
ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்குகின்ற ஓபன் பீட் (OPEN Feed ) என்ற நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான காத்தான்குடியைச் சேர்ந்த கலாநிதி அலவி ஷரீஃப்டீன் அவர்களால் நிந்தவூரில் அனாதை சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான 3 மாடிகளைக்கொண்ட கல்வி நிலையம் ஒன்றுக்கான அடிக்கல் நடப்பட்டது.
நிந்தவூர் CHA(inter Centre for Humanitarian Activities ) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம் ஐ உமர் அலி அவர்களது அழைப்பின் பேரில் இந்நிகழ்வு இன்று29.12.2024 ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் 25ஆம் பிரிவில் இடம்பெற்றது.
தனது அயராத முயற்சியினால் இலங்கை முழுவதும் சுமார் 3000 அனாதை சிறார்களுக்கு கல்விக்கான புலமைப் பரிசில்கள் கலாநிதி அளவி ஷரீஃப் டீன் அவர்களது நிறுவனத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
CHA அமைப்பின் தலைவர் சட்டத்தரணி உமர் அலி அவர்கள் தனது தலைமை உரையில் , ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு தனது பிறந்த மண்ணுக்காக மட்டுமன்றி சர்வதேசமெங்கும் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற கலாநிதி அலவி ஷரீஃப்டீன் அவர்கள். அனாதை சிறார்களது எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு திட்டமிட்ட முறையில் இந்த புலமை பரிசில்களை நாடெங்கிலும் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். இந்த புலமை பரிசில் திட்டம் ஏனைய நிறுவனங்கள் போல் அல்லாது மிகவும் வித்தியாசமான முறையில் மாணவர்களின் நலன் கருதி கட்டுக்கோப்புடன் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. என குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வின் பிரதம அதிதியான கலாநிதி அலவி ஷெரிப்தீன் அவர்கள் உரையாற்றுகையில் "எமது பிரதேசத்து மாணவர்கள் சிறப்பான பழக்கவழக்கம் உடையவர்களாக, நல்ல கல்விமான்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டதுடன் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்கின்ற சுத்தமான நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் அவர்களுக்கு கல்வி கற்கக்கூடிய இடங்களை நாடெங்கிலும் அமைக்க வேண்டும் என்பது தனது கனவாகும் என்பதுடன் எந்த ஒரு பிள்ளையும் தனக்குத் தகப்பன் இல்லாததை காரணமாக கொண்டு கல்வி கற்பதிலிருந்து நின்று விடக்கூடாது, அவர்கள் எதிர்காலம் இருளடைந்து விடக்கூடாது. ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அச்சமுகத்தின் கல்வி நிலையிலேயே தங்கி உள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
Post a Comment