இனவாதமற்ற ஆட்சியும், அமைச்சரவையில் முஸ்லிமும் - புரிந்து கொள்வதற்கான சில குறிப்புகள்
- அஹ்மத் -
இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறைத் தேர்தல் குறிப்பாக இரு முக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது.
i. மிக குறைவான வாக்குகளையே வழமையாகப் பெற்று ஒரு சில சந்தர்ப்பங்களில் தவிர எப்போதும் எதிர்க்கட்சி ஆசனத்திலேயே உட்கார்ந்து வந்த வித்தியாசமான சிந்தனைப் போக்கு கொண்ட கட்சி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றதை விட ஆச்சரியமானது விகிதாசாரத் தேர்தல் முறையில் சாதிப்பது. அதுவும் மிகக் கடினமாக மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பிடித்தமையாகும்.
ஓரளவு சிறந்த முறையில் இவ்வாட்சி இருக்குமாயின் இனி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக அது இலங்கை அரசியலில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. சிங்கள சமூகத்தின் மிகப்பெரும் ஆதரவைப் பெற்ற கட்சியாக இது மாறி உள்ளமையை நாம் இங்கே கவனத்திற் கொள்ள வேண்டும்.
ii. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட அக்கட்சியை பெரியளவு தூரம் ஏற்றுள்ளமை இரண்டாவது முக்கிய அம்சமாகும். தமிழர்களது உரிமை சார் அல்லது தனிஅதிகாரம் சார் அரசியற் போராட்டத்தை தமிழர்களில் ஒரு பெரும்பான்மை புறக்கணித்துள்ளது என்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். அவ்வாறே முஸ்லிம்களது தனிக் கட்சி சார் அரசியலையும், முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் முஸ்லிம்கள் இத்தேர்தல் மூலம் மிகவும் பின்னடைவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த உண்மையை நன்கு புரிந்து ஒரு வித்தியாசமான பாரம்பரியப் பேரம்பேசல் அரசியல் போக்குக்கு முரணான அல்லது மாற்றமான அரசியல் குழுவை நாம் எதிர் கொண்டுள்ளோம் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது இப்போதைய பேரம்பேசல் அரசியல் போக்குக்கு இது முரணானது என்பதையே இங்கு கூறுகிறோம். எனவே அதனுடனான எமது அணுகுமுறையும் வித்தியாசமாக அமைய வேண்டும் என்பதையே இங்கு உறுதிப்படுத்த முனைகிறோம்.
இப்போது முஸ்லிம் சமூகத்தில் நிறைய விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள அமைச்சுப் பதவி கொடுக்கப்படாமையை எடுத்து அதனையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
அமைச்சுப் பதவி கிடைக்காமையை அரசு செய்த தவறு எனக் காண்பதும் விமர்சிப்பதும் குறிப்பிட்ட சகோதரர்களைப் பொறுத்தவரையில் நியாயமானதே. முஸ்லிம் சமூகத்தில் அது பலராலும் ஏற்கப்படுவதும் நியாயமானதேயாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் இது வரை காண முடியாத நிகழ்வு அது எனக் கண்டு கவலைக்கும் கோபத்திற்கும் உட்படுவதும் எதிர்பார்க்கத்தக்கதாகும், நியாயமானதாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியை வைத்தே ஜே.வி.பி யிலும் இனவாதப்போக்கு மிகைப்பட்டுள்ளது, முஸ்லிம் சமூகத்தை இது புறக்கணித்துள்ளமைக்கு இது ஒரு சான்று, முஸ்லிம் சமூகத்தை அது மதிக்கவில்லை என்றெல்லாம் பேசுவது அவசர முடிவுகள் என்றே நாம் கருதுகிறோம்.
அவ்வாறே ஜே.வி.பி க்கு கொடுத்த ஆதரவை இக்காரணத்திற்காக மீளப் பெறுவதும் அவசரமாக எடுக்கும் முடிவுகள் என்றே கருதுகிறோம். ஜே.வி.பி முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் விடும் தவறுகளை விமர்சித்து அவர்களோடு கலந்துரையாடி தொடர்ந்து அவர்களோடு சென்றதன் பிறகு முடிவுக்கு வருவதே பொருத்தமான முடிவாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அமைய முடியும் எனக் கருதுகிறோம். இதற்கான காரணங்களைக் கீழே தருகிறோம்.
இலங்கை, இனக்கலவரங்களை மிக அதிகமாகக் கண்ட நாடு. 1976 முதல் 2003 வரை மட்டும் முஸ்லிம்களை நோக்கி எழுந்த 30 இனக்கலவரங்களை அது கண்டது. அதாவது சராசரியாக வருடத்திற்கு ஒரு இனக்கலவரம் என்ற சராசரியை அது கொண்டுள்ளது. அதன் பின்னரும் திகன, அளுத்கம, குருநாகலையின் பல பகுதிகள் என பல பெரிய இனக்கலவரங்களை முஸ்லிம் சமூகம் கண்டது. அதனால் முஸ்லிம் சமூகம் இழந்தவை மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. இந்த அரசு இன, மதத் தீவிரவாதங்களுக்கு எதிரான அரசு என திரும்பத் திரும்பப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலும் அது இறுதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ இந்த அரசே பொருத்தமானது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இரண்டாவது, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நிகழ்வு. அதற்கு முன்னரும் பின்னரும் எவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன என்பது நாம் அனுபவித்த நிகழ்வுகளாகும்.
மத்ரஸாக்கள், இஸ்லாமிய நிறுவனங்கள் சந்தேகத்திற்குரியனவாகின. தொடர்ந்து விசாரணைகளும், கைதுகளும் நிகழ்ந்தன. இன்னும் அலை பூரணமாக நின்று விடவில்லை. அரபு மொழியே தடை செய்யப்பட்டு விடுமோ என்ற நிலை தோன்றி அரபு மொழி நூல்கள் இறக்குமதி செய்வது இன்று வரை தடைசெய்யப்பட்ட நிலையே உள்ளது.
அடுத்து கொவிட் தொற்றின் போது ஜனாஸா எரிக்கும் நிலை மிகக் கடுமையாகக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த எல்லா நிகழ்ச்சிகளின் போதும் குறித்த அரசாங்கங்களில் அமைச்சரவையில் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் சிலர் மௌனம் காத்தார்கள். சிலர் ஓரளவு பேசினார்கள், சத்தமிட்டார்கள், குரல் கொடுத்தார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்ட எவற்றையும் அவர்களால் எந்த வகையிலும் மாற்ற முடியவில்லை. இதிலிருந்து எமக்கு புரியும் உண்மை கீழ்வருமாறு அமையலாம்.
இனத் தீவிரம் அல்லது இன உணர்வு மிகைத்த ஓர் அரச தலைமை அமையும் போது அமைச்சரையில் முஸ்லிம்கள் இருந்த போதிலும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.
அவ்வாறே இனத்தீவிரம் அற்ற இன, மத தீவிரத்தை மறுக்கும் ஒரு அரச தலைமை அமைந்தால் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாதபோதிலும் மக்கள் நிம்மதியாக வாழலாம். இந்த உண்மையையே இப்போதைய அரசாங்கத்தில் பார்க்கப் போகிறோம். அதற்கு சற்றுக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றுதான் நாம் கூறுகிறோம்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் கீழ்வருவன மிக முக்கியமானதாகும்.
i. உயிர்த்த ஞயிறு தின நிகழ்வின் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகம் மதப்பயங்கரவாதத்தை தன்னுள் அடக்கியுள்ளது என்ற கருத்து பொய் என்பது தெளிவாக வேண்டும்.
ii. மத்ரஸாக்கள், பள்ளிகள், இஸ்லாமிய நிறுவனங்களுக்கு எதிரான கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும்.
iii. அரபு நூல்கள் தடை நீங்கி மத்ரஸாக்களும், இஸ்லாமிய நிறுவனங்களும் இஸ்லாமிய ஆய்வாளர்களும் அவற்றைப் பெறுவது இலகுவாக்கப்பட வேண்டும்.
iv. தனியார் சட்டம், காதி நீதிமன்றம், வக்ப் என்பன சீரமைக்கப்பட்டு சிறந்தமுறையில் இயங்கவிடப்பட வேண்டும்.
v. முஸ்லிம் சமய திணைக்களம் ஒரு சீரான நடைமுறையைப் பேணி இயங்க ஆவன செய்யப்பட வேண்டும்.
இவ்வளவையும் முன்னாள் அரசுகளால் அவற்றின் கெபினட்டில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் செய்ய முடியவில்லை. இந்த அரசில் இது செய்யப்படுமானால் கெபினட்டில் அமைச்சர்கள் இல்லாமை கூட ஒரு பெரிய தாக்கத்தை விளைவிக்கவில்லை எனப் புரிந்து கொள்ளலாம். இதன் பொருள் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இல்லாமலிருப்பது சரி, அதனை ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்பது அல்ல. இந்த அரசோடு உறவாடுவதில் உள்ள வித்தியாசமான போக்கையே நான் குறிப்பிட வருகிறேன்.
அத்தோடு இன்னொரு பகுதியையும் இங்கே நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நாடு ஓரளவாவது சீர்படுவது சாத்தியம் என்று அனுமானிக்க முடிகிறது. அது சாத்தியப்பட்டால் முஸ்லிம் சமூகமும் பெரும் பயன்பெறும் சாத்தியமுள்ளது. ஏனெனில் முஸ்லிம் சமூகம் வறுமை கூடிய சமூகம். அத்தோடு கல்வி ரீதியாக நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமூகம் என்பது தெளிவானதொரு உண்மையாகும்.
இறுதியாக இப்பகுதியில் இன்னொரு முக்கிய அம்சத்தை குறிப்பிட்டு முடிக்கிறோம்.
முஸ்லிம் சமூகம் சுதந்திரத்திற்கு முன்னால் சில அரசியல் தலைமைத்துவங்களைக் கண்டது. சுதந்திரத்தின் பின்னர் பதியுத்தீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ். ஹமீத், எம்.எச்.எம் அஷ்ரப் என்ற சிறந்த தலைமைத்துவங்களைக் கண்டது. அதன் பின்னர் அந்தத் தரத்திலான முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களை முஸ்லிம் சமூகம் காணவில்லை. முஸ்லிம் சமூக நலன்களையே மையப்படுத்தி உருவான முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரின் மறைவின் பின்னர் துண்டு துண்டாக உடைந்து போனது.
இப்போது ஒரு வித்தியாசமான கட்சியில் இணைந்து முஸ்லிம்கள் சிலர் பாராளுமன்றம் சென்றுள்ளனர். அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் தலைமைகளாக உருவாகும் சந்தர்ப்பம் உள்ளது. பாராளுமன்றத்தின் உள்ளே சென்றவர்கள் மாத்திரமல்ல. அவ்வாறு செல்லாது கட்சியின் உள்ளே நெருக்கமாக உழைக்கும் இன்னும் சிலரும் உள்ளனர். இவ்வாறு உருவாகி வரும் இந்த அரசியற் செயற்பாட்டாளர்களையும் முஸ்லிம் சமூகம் ஆதரவளித்து வளர்த்தெடுக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக சில அரசியல் தலைமைத்துவங்களை முஸ்லிம் சமூகம் கண்டு வந்தது. அவர்கள் விட்ட தவறுகளையும், பலவீனங்களையும் நாம் கண்டோம். தமக்குப் பின்னால் பொறுப்புச் சுமக்கக்கூடிய இளம் தலைமைகளை உருவாக்கும் வழிமுறைகள் கூட அவர்களிடம் இல்லாமையைக் கண்டோம். இந்த நிலையில் புதிய சில அரசியல் தலைமைகள் எமக்குத் தேவை என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பின்னணியில் முஸ்லிம் சமூகம் இப்புதிய தலைமைகளை நோக்க வேண்டும் என்று தான் நாமும் கேட்டுக் கொள்கிறோம்.
அதேவேளை இனவாதம், கட்டமைப்பு ரீதியாக வேரூன்றிய நாடு இது. இனமையவாதம் கொண்ட இத்தகைய நாடுகளில் ஒடுக்கப்படும் சிறுபான்மையாக இன நீக்கம் செய்யப்பட்டு இலங்கையராகுமாறு கேட்கும் நிலையே இங்கு காணப்படுகிறது. இவ்வாறு பேசி ஒரு வித்தியாசமான அரசியல் போராட்டம் பற்றி உரையாடும் சகோதரர்கள் எம்மிடையே உள்ளனர். அவ்வாறே அழுத்தக் குழுவாக இருந்து செயற்படல் சிறுபான்மை சமூகத்திற்கு எவ்வாறு அவசியம் எனப் பேசுவோரும் உள்ளனர். இச் சகோதரர்கள் தமது கருத்தை சமூகமயப்படுத்தி சமூக அங்கீகாரம் பெற்று ஓர் அரசியல் ஒழுங்கை உருவாக்கட்டும். எது சமூகத்திற்கு நலன்பயக்கிறதோ சமூக அங்கீகாரம் பெறுகிறதோ அது நிலைக்கட்டும்.
ஆனால் இப்போது ஜே.வி.பி கட்சி, அதில் இணைந்துள்ள முஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்கள் களத்தில் உள்ளனர். அமைச்சு கிடைக்கவில்லை என்பதற்காக அந்தக் கட்சியையும் அதன் அரசியல் தலைமைகளையும் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்பதனையே இங்கு நாம் கூற வருகின்றோம். இது ஜே.வி.பி யைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுங்கள் எனக் கூறுவதாக அமையாது என்பது தெளிவு.- Vidivelli
Post a Comment