நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்த உடன்படிக்கையையும் இந்தியாவுடன் கைச்சாத்திடவில்லை
இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேசிய மக்கள் சக்தி கூறியது.
எனினும், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்த எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார்.
இந்தநிலையில், இந்தியா தொடர்பிலும், எட்கா தொடர்பிலும் முன்னதாக தெரிவித்த கருத்தைத் தேசிய மக்கள் சக்தி தற்போது மீளப் பெறுமா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.
இதன்போது கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
உள்நாட்டில் மின்சக்தி உற்பத்தி செய்வதாகவும் மேலதிக மின்சக்தியை பிம்ஸ்டெக் அமைப்பின் பொருளாதார ஒத்துழைப்புடன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் நாம் முன்னதாக கூறியிருந்தோம்.
இதனூடாக, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
அதனை விடுத்து, நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் கைச்சாத்திடவில்லை.
இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மின்சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்கொண்டு செல்லப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நாட்டை காட்டிக் கொடுக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Post a Comment