ஒரு தந்தை தனது தனயனுக்கு வரைந்த கடிதம்
அருமை மகனே...!
ஒரு நாள் முதுமை என்னை
பதம்பார்க்கும்...
அப்போது,
என் பார்வை குறைந்துவிடும்...
உடல் கூனிப்போய்விடும்...
கேட்கும் திறன் குறைந்துவிடும்...
பேச்சுக்கள் திக்கும் முக்கும்...
நடக்க, பிடிக்க முடியாது போய்விடும்...
ஞாபக சக்தி குன்றிவிடும்...
என் கைகள் நடுங்கி, உணவு மடியில்
கொட்டிவிடும்...
ஆடைகளை அணிய திராணி
பெறமாட்டேன்...
நடக்க பிடிக்க முடியாது போய்விடும்...
அப்போது என் நடவடிக்கைகளில்
அசாதாரண நிலையை நீ காண்பாய்...
அத்தருணங்களில் நீ என்னோடு
சகிப்புடன் நடந்து கொள்...!
எனக்கு தயவு காட்டு...!
என்னால் திராணியற்றுப் போகும்
பல விடயங்களை நான் உனக்கு
சிறுவயதில் சகிப்போடு கற்றுத்
தந்ததை மனதில் வைத்துக் கொள்!
நான் வார்த்தைகளை மீட்டி மீட்டி
சொல்லும் போது நீ என்னுடன்
கோபம் கொள்ளாதே! மனக்கடுப்போடு
நடந்து கொள்ளாதே...!
உனக்காக நான் சிறுவயதில்
எத்தனை முறை கதைகளை
உன் மகிழ்ச்சிக்காக திருப்பி திருப்பி சொல்லியிருப்பேன் என்பதை மனதில்
வைத்துக் கொள்...!
நான் புரிந்துகொள்ள எனக்கு
நீ நேரம் கொடு...!
நீ புரிந்தது கொள்ள நான் உனக்கு
நேரம் தந்ததை ஞாபகத்தில்
வைத்துக் கொள்...!
நான் பார்க் அலங்கோலமான
தோற்றத்தில் இருக்க நேரிடும்...!
ஆடைகள் அழுக்காகி அசிங்கமான
தோற்றத்தில் இருக்க நேரிடும்...!
அந்நேரம் என்னை நீ அருவருப்பாக
பார்க்காதே...!
நீ குழந்தையாக இருக்கும் போது
உன்னை நான் அழகாக, நேர்த்தியாக
பார்க்க வேண்டும் என்பதற்காக நான்
எடுத்த பிரயத்தனங்களை
நீ நினைத்துப் பார்...!
என்னால் முடியாத இடங்களுக்கு
நீ என்னை அழைத்துச் செல்லும்
போது என்னுடன் கனிவாக இருந்து விடு!
சிறு வயதில் எத்தனை பல இடங்களுக்கு
உன் கை பிடித்து அழைத்துச் சென்று
உன்னை ஆனந்தப்படுத்தியிருப்பேன்...!
ஆதலால், இன்று என் கை பிடிக்க
நீ வெட்கப்படதே...!
நாளை உன் கை பிடிக்க ஒருவனை
நீயும் தேடுவாய்...!
நான் உன்னைப் போன்று வாழ
ஆரம்பிப்பவனல்ல...
வாழ்ந்து முடிந்து விடைபெற்றும்
தருவாயில் உள்ளவன்...
எனக்கு நீ செய்யும் பெரும் பணி,
என் தவறுகளை மன்னிக்க வேண்டும்...
என் குறைகளை மூடி மறைக்க வேண்டும்...
என் முதுமைக்கு கருணை காட்ட வேண்டும்...
நீ பிறக்கும் போது நான் உன்னோடு இருந்தேன் அல்லவா!
அதுபோல், நான் இறக்கும் போது நீ என்னோடு இருந்துவிடு!
இரட்சகனே...!
கருணை மிக்க ரஹ்மானே...!
துன்பகரமான வயோதிபத்தை
விட்டும் எம்மை காத்தருள்வாயாக...!
எம் பெற்றோர்களின் தவறுகளை
மன்னித்து, அவர்களுக்கு கருணை
காட்டுவாயாக...!
நித்திய சுவனத்தில் எம்மையும்
அவர்களையும் ஒன்றிணைத்து
விடுவாய் ரஹ்மானே...!
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment