Header Ads



புலிகளின் மரண தண்டனை பட்டியலில் இருந்து, கபன் சீலையுடன் முஸ்லிம் தேசியத்திற்காக உழைத்தவர்


விடுதலைப்புலிகள் மரண தண்டனை பட்டியலில் இடம்பெற்ற கபன் சீலையுடன் முஸ்லிம் தேசியத்தின் முகவரிக்கு உழைத்த அவர் சமூகத்தின் மூத்த போராளியான, வீரம் விளைந்த மகனாக, முஸ்லிம் உரிமைகளை நாடு முழுவதிலும் முழங்கிய முழக்கமாக வாழ்ந்து மறைந்துள்ளார். அவரின் சமூகப்பணிகள் பெறுமதி அளக்க முடியா உயர்வானது. அவரின் சமூகப்பணிகள் காலத்தால் அழியாத வரலாறாக நீளும். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்ளின் மறைவையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.


அவரது அனுதாப செய்தியில் மேலும், 


முஸ்லிம் தேசியத்தின் விடுதலை போராளி, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்கள் காலமான செய்தியறிந்து துயருற்றுள்ளேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்..!


புலிகளின் ஆட்டம் ஆரம்பித்திருந்த காலமது. முஸ்லிம் விடுதலை இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருந்த நேரமது. 1988 காலப்பகுதியில் மாணவர் காங்கிரஸ் தலைவராக நானிருந்தபோது சட்டத்தரணி சரூக் காரியப்பரின் இல்லத்தில் வைத்து ஏற்பட்ட உறவு எனக்கும் சகோதரர் மஜீத் அவர்களுக்கும்.


விடுதலை புலிகளின் மரணதண்டனை பட்டியலில் இடம்பெற்று கபன் சீலையுடன் முஸ்லிம் தேசியத்தின் முகவரிக்காக உழைத்த அவர் சமூகத்தின் மூத்த போராளியாக, வீரம் விளைந்த மகனாக, முஸ்லிம் உரிமைகளை நாடு முழுவதிலும் முழங்கிய முழக்கமாக வாழ்ந்து மறைந்துள்ளார். அவரின் சமூகப்பணிகள் பெறுமதி அளக்க முடியா உயர்வானது. அவரின் சமூகப்பணிகள் காலத்தால் அழியாத வரலாறாக நீளும்.


2001 இல் நான் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கிய நாள் முதல் நான் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் எனது வெற்றிக்காக முழுமையாக உழைத்த அவர் பிரச்சார நடவடிக்கைகளிலும் முழு ஈடுபாட்டுடன் எனக்காக உழைத்தார். நல்ல ஆலோசகராக, முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை எங்களுக்குள் செலுத்திய அவரின் இழப்பு எனது சொந்த சகோதரனை இழந்தது போன்று பெருந்துயரத்தை என்னுள் தந்துள்ளது.


சகோதரர் முழக்கம் மஜீத் காலமாகிய செய்தி ஆழ்ந்த கவலையை என்னுள் ஆட்கொண்டுள்ளது.  அன்னாரின் நல்லமல்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொண்டு உயரிய ஜன்னத்தை அவருக்கு வழங்கிடவும், அவரின் இழப்பால் துயருற்ற அவரின் குடும்பம், நண்பர்கள், நலன்விரும்பிகளுக்கு மன நிம்மதியை வழங்கிடவும் பிராத்திக்கிறேன். - என்று தெரிவித்துள்ளார்.


 நூருல் ஹுதா உமர்


No comments

Powered by Blogger.