அரிசியைப் பெற மக்கள் நீண்ட வரிசை, விலை கூட்டியும் விற்பனை
நேற்றைய தினம் (04) முதல் சதொச ஊடாக 2 இலட்சம் கிலோ கிராம் அரிசி விடுவிக்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்த போதிலும் இன்று (05) காலை வரை விற்பனை நிலையங்களுக்கு அரிசி கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியதை போன்று, சதொச ஊடாக அரிசியைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும் தங்களுக்கு அரிசி கிடைக்கவில்லை எனவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, சிவப்பு அரிசிக்குத் தென் மாகாணத்தில் அதிக தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அக்குரஸ்ஸ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம், சிவப்பு அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான 210 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாகக் குறித்த வர்த்தக நிலையங்களை அண்மித்து நீண்ட மக்கள் வரிசைகள் காணப்படுவதாக Hiru செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் வாடிக்கையாளர் ஒருவருக்கு 3 கிலோ கிராம் என்ற அடிப்படையிலேயே சிவப்பு அரிசி வழங்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கையிருப்பில் உள்ள அரிசியை வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
Post a Comment