முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத்
ஜமால்தீன் எம். இஸ்மத் (கிண்ணியா)
நமது நாட்டில் அழியாப் புகழ் ஈட்டிக் கொண்டோரிடையே தனக்கென தனியானதோர் இடத்தைத் தட்டிக் கொண்டவர் இலங்கையின் முதலாவது கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத் ஆவார். அந்த வகையில் 2023.12.23 ஆம் திகதி எம்மை விட்டு மறைந்த அன்னாரை ஒரு வருட நினைவில் இன்றும் மறையாமல், மறவாமல் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் நினைவு கூறுகின்றனர்.
இவர் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதியன்று கிழக்கின் தலைநகர் திருகோணமலை மாவட்டத்தின் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள கிண்ணியாவில் ஒரு கன்னியமான குடும்பத்தில் முன்னாள் திருமலை மாவட்ட அரசியல் அதிகாரியும், மூதூர் தொகுதி முதல்வரும் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சருமான மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத், மர்ஹுமா சல்மா பீவீ தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக பிறந்தார். ஆரம்பக் கல்வியை கிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் கற்று புலமைப் பரிசில் சித்தி பெற்று மார்க்கக் கல்வியை கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரியில் பகுதி நேரமாக பயின்ற வந்த நிலையில் இடைநிலைக் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் அகடமியிலும் சட்டக் கல்வியை திறந்த பல்கலைக் கழகத்திலும் கணக்காளர் பகுதி ஐஐ வரை கொழும்பிலும் கற்றார். ஆரம்ப காலத்தில் முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம்.முகம்மது அவர்களின் சிப்பிங்லயன் ஏஜன்சில் பிரதம அதிகாரியாக கடமையாற்றினார்.
மேலும், 1987.11.13 இல் தனது தந்தை மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் அகால மரணத்தைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு பொருத்தமான ஒருவர் இல்லாத காரணத்தினால் புத்தி ஜீவிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க சட்டத் துறையில் கற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தனது 30 ஆவது வயதில் அரசியல் தலைமைத்துவம் வகிக்க கிண்ணியா மண் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத் அவர்களை ஈர்த்தன. தந்தையின் பணியை மக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க முழுமையாக அரசியலில் ஈடுபட்டமையினால் பூரணமாக சட்டத்துறையை பூர்த்தி செய்ய சந்தரப்பம் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய அவருக்கு தனது தந்தையின் மூதூர்த் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மற்றும் மாவட்ட இணைப்பாளர் பதவியும் 1988 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா அவர்களினால் நியமிக்கப்பட்டதையடுத்து தனது ஆரம்ப அரசியல் நுழைவு 1989 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்;;ட கன்னித் தேர்தலில் வீழ்ச்சி கண்டார். வீழ்ச்சி என்பதற்காக ஓயவில்லை. தந்தையின் சிசியர்களை இனங்கண்டு அவர்களோடு ஒன்றிணைந்தார். மீண்டும் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட்டு 11,111 வாக்குகளைப் பெற்று கிண்ணியா பிரதேச சபைக்கு தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். காலம் நிறைவடைவதற்கு முன்பு மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா - அஷ்ரப் ஒப்பந்தத்திற்கமைய 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நிரந்தர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மக்களின் அதிகூடிய 21,716 வாக்குகளால் வெற்றி பெற்றதுடன் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா அவர்களினால் தபால் தந்தி பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தார். மீண்டும் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்காலப் பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
இவர் 2004 இல் மீண்டும் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் உலமாக்கள், புத்திஜீவிகள், பல்தரப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் வேண்டுகோளை கௌரவித்து சமூக மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணியில் போட்டியிட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு 26,948 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று முதன்மைப் பாராளுமன்ற உறுப்பினராக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இவர் திருகோணமலை புணர்வாழ்வு மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா அவர்களினால் நியமிக்கப்பட்டார். அத்தோடு 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ளுராட்சி மாகாண சபைகள் பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
மேலும், கட்சித் தலைமைகளின் ஒப்பந்த சிதைவுநிலை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊடாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2012 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சராக 2012.09.18 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் முதன் முதலில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் முதலமைச்சர் ஆவார். இதன் பதியேற்பு சத்தியப் பிரமானம் 2012.09.22 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போது முதலமைச்சரின் முதலாவது ஊடக சந்திப்பில் மாகாண இன உறவை மையப்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடுவது போன்று காணி, பொலிஸ் அதிகாரம் சபைக்கு வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தமையும் மற்றும் இச்சபையில் சகோதர தமிழ் மகன் ஒருவர் நியமிக்கப்படாமை குறித்தும் மனம் வருந்தியதோடு நியமிக்க முயற்சியும் செய்தார். இறுக்கமான அரசியல் யுகம் ஒரு பக்கம் ஐந்து வருட கால மாகாண ஆட்சிக்காலத்தில் இரண்டரை வருடம் பணிபுரிந்தமை அவரின் ஆதங்க சில விடயங்கள் நிறைவேற்ற தடைக்கல்லாகக் காணப்பட்டது.
தன் பரம்பரை அரசியல் வாழ்வு சமூக எழுச்சிக்காகவும் பிராந்திய அபிவிருத்திக்காகவும் 63 வருட காலம் தந்தையும் தனயனும் காட்டிய அரசியல் அழியாச் சுவடுகள். கிழக்குப் பிராந்தியம் முழுவதும் கல்லும் மண்ணும் காவியம் பாடும் அளவிற்கு சான்றுகள் ஏராளம். உண்மை நேர்மை சுய வாழ்வில் நிலை கொண்டிருந்தமையால் உச்சகட்ட அரசியல் அதிகாரம் இருந்தும் அரச சொத்துக்கள் அனைத்தும் அமானிதம் எனக் கருதி அமானிதம் காத்த பிதாமகனாவகவே கண்டு கொண்டோம். சகல இன மக்களோடு அன்பாகப் பழகக்கூடிய ஊழல் மோசடியில் ஈடுபடாத கரைபடியாத ஒரு மாமனிதரான மர்ஹும் நஜீப் ஏ. மஜீத் அவர்களுக்கு வல்ல ஏக அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற பிரகாசமான சுவர்க்கத்தை வழங்குவானாக...!
Post a Comment