Header Ads



எந்த நிபந்தனையும் எனக்கு போடப்படவில்லை


 (எம்.ஆர்.எம்.வசீம்)


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் எனக்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை யாருடனும் பங்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறான எந்த நிபந்தனையும் எனக்கு போடப்பவும் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.


கொழும்பில் உள்ள அவரது காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த கட்சிக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பதவியில் ஒன்று எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் பதவியை எனக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே எனது பெயரை பரிந்துரை செய்திருந்தது. அதன் பிரகாரமே எனக்கு இந்த தேசியப்பட்டியல் கிடைக்கப்பெற்றது. 


ஆனால் எனக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு பின்னர் வேறு ஒரு உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடனே எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு எந்த நிபந்தனையும் எனக்கு விதிக்கப்படவில்லை. எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி அடுத்துவரும் 5வருடங்களுக்கு என்க்குரியதாகும் இதில் யாருடனும் நான் பங்குபோடப்போவதில்லை.


அத்துடன் புதிய ஜனநாயக முன்னணியுடன் 4 கட்சிகளே ஒப்பந்தம் செய்திருந்தன. அந்த கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகள் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு எனது பெயரை பரிந்துரை செய்திருந்தன. அவ்வாறு இல்லாமல் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள நான் ஒருபோதும் போராடவில்லை. அந்த வகையில் எனக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதியை பெற்றுக்கொடுக்க பாடுபட்ட நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும்  பலவீனமடைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் பலப்படுத்துவதற்கான கட்சி மறுசீரமைப்பு நடவக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேஸ் சிலிண்டருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிட்டது. ஆனால் எதிர்வரும் காலங்களில் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போதும் கூட்டணி அமைத்தே மக்களின் ஆதரவுடன் பலமடைந்திருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கே தற்போது மீண்டும் முயற்சித்து வருகிறோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளிட்ட முற்போக்கு கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவதே எமது இலக்காகும்.


மக்கள் விடுதலை முன்னணி மிகவும் திட்டமிட்டு முற்போக்கான பயணத்தை மேற்கொண்டே அரச அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது. என்றாலும் மீண்டும் எங்களுக்கு ஸ்திரமான நிலைக்கு வரமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.