Header Ads



கிளப் வசந்த கொலை - வேதனைகளை வெளிப்படுத்தும் மனைவி


கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி இலங்கையை உலுக்கிய மிகக் கொடூர கொலை சம்பவம் தான் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம்.


அத்துருகிரிய பிரதேசத்தில், பச்சைக் குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்காக, தனது மனைவி சகிதம் சென்றிருந்த க்ளப் வசந்த அங்கு வந்த ஆயுததாரிகள் சிலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.


இதன்போது, பிரபல பாடகி சுஜீவாவின் கணவரும் உயிரிழந்த நிலையில், பாடகி சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.


மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து KPI என்று எழுதப்பட்ட தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.


இந்த சம்பவம், அதன் பின்னரான நாட்களில்  இலங்கையில் பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக, பல சர்ச்சைகளை தோற்றுவித்த சம்பவமாகவும் க்ளப் வசந்த படுகொலை அமைந்தது.



க்ளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பச்சைக் குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அழுது புலம்பி கண்ணீர் விட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. எவ்வாறாயினும், பின்னர் அவரும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு முக்கியப் புள்ளி என தெரியவந்தது. அத்துடன் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டனர்.


அத்துடன், க்ளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற போதும் கூட பல அச்சுறுத்தல்கள் இருந்தது தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன..


இந்தநிலையில், பல மாத சிகிச்சைகளுக்குப் பிறகு க்ளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன தனது கணவர் கொல்லப்பட்ட தினத்தன்று நடந்த விடயங்களை நேர்காணல் ஒன்றின் ஊடாக பகிர்ந்து கொண்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் அவர் விபரிக்கையில்,


“அன்று நடந்த சம்பவம் என்னை முற்றாக நிலைகுலைய வைத்தவிட்டது. அதனை மறக்க நினைத்தாலும் என் நினைவில் அந்த சம்பவம் மட்டுமே இருக்கின்றது.



என்னால் பல மாதங்கள் உறங்கமுடியவில்லை. எனக்கு பயமாக இருக்கும். அதனால் நான் கண்ணை மூடுவதில்லை. கண்ணை திறந்து வைத்துக் கொண்டு காத்திருப்பேன். உண்ணவும் முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது.


துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலைக்கு நான் கொண்டு செல்லப்பட்ட போது எனது அருகிலேயே எனது கணவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. எனது ஒரு கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.


எனது கணவர் என் அருகில் இருந்ததைக் கூட நான் அறியவில்லை. ஒன்றரை மாதங்களின் பின்னரே இதையும் கூறினர்” என்று கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டுள்ளார்...   

No comments

Powered by Blogger.