ஜமாத் வந்த 8 பேர் - குற்றவாளிகளாக்க எடுக்கப்பட்ட முயற்சி (முழு விபரம்)
- எப்.அய்னா -
நுவரெலியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணிகளில் ஈடுபட்டதாக கூறி 8 இந்தோனேஷியர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், கடந்த திங்களன்று குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னால் பாரிய சதிகள் இருந்துள்ளமை தொடர்பில் சந்தேகிக்க முடியுமான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையில் 1950 களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணிகள் முஸ்லிம் அல்லது இஸ்லாமிய சமூகத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1999ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக கூட்டிணைக்கப்பட்டுள்ள மர்கஸ் மத்திய நிலையம் ஊடாக இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தப்லீக் பணிகளுக்காக (பிரசாரம்) இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு முஸ்லிம்கள் செல்வதும், வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இங்கு வருவதும் காலா காலமாக நடந்து வரும் ஒரு செயற்பாடாகும்.
இவ்வாறான பின்னணியிலேயே ஆன்மீக சுற்றுலா என வீசா பெற்று இலங்கைக்கு வந்த 8 இந்தோனேஷியர்களை பொலிஸார் கைது செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பீ 12408/24 எனும் இலக்கத்தின் கீழ் இந்த வழக்கு நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கை ஊடாக (பி அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் அத்தியட்சர் பணிமனையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த ஊடாக இந்த அறிக்கை நுவரெலிய நீதிவான் பிரபுத்திகா நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பீ அறிக்கை பிரகாரம், கடந்த 2024.12.02 ஆம் திகதி நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.டப்ளியூ.பி.ஏ.டப்ளியூ.ஜி.ஆர்.பீ.எச்.டப்ளியூ.ஏ.பீ. ஹக்மன, வயல சுற்றுலா பிரிவூடாக ஒரு தகவலை எழுத்து மூலம் நுவரெலிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்கவுக்கு அனுப்பியுள்ளார். அந்த தகவல் குறித்தே உதவி பொலிஸ் அத்தியட்சர் கே.எல்.எஸ். நிஷாந்த தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, நுவரெலியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எஸ்.பி. டி சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.டப்ளியூ.பி.ஏ.டப்ளியூ.ஜி.ஆர்.பீ.எச்.டப்ளியூ.ஏ.பீ. ஹக்மனவின் அறிவுறுத்தலின் கீழ் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.(கடந்த வாரம் இது தொடர்பில் முழுமையான தரவுகள் விடிவெள்ளியில் பிரசுரிக்கப்பட்டன)
இந்த நிலையில் இந்த விவகார வழக்கு கடந்த 16 ஆம் திகதி நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் மீள விசாரணைக்கு வந்தது.
முறைப்பாட்டாளர் அல்லது விசாரணையாளர்கள் சார்பில் பொலிஸ் சட்டப் பிரிவின் மத்திய மாகாண பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிலுபுல் சோமசிறி ஆஜரானார். விசாரணை அதிகாரியான, நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி ஆஜராகாமல், சட்டப் பிரிவில் இருந்து உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் ஆஜராக காரணம் இருக்கின்றது. இந்த சம்பவத்தின் பின்னால் இருந்த சதி தொடர்பிலான தகவல்கள் வெளிப்பட்டதால், பொலிஸ் மா அதிபரின் நேரடி உத்தரவில் இவ்வாறு சட்டப் பிரிவின் மத்திய மாகாண பணிப்பாளர் ஆஜரானதாக தகவல்கள் உள்ளன.
இந்த நிலையில் ஆஜரான உதவி பொலிஸ் அத்தியட்சர் மன்றில் விடயங்களை முன் வைக்கும் போது,
‘கடந்த 2 ஆம் திகதி, நுவரெலியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய அல் கபீர் ஜும் ஆ பள்ளிவாசலில் இருந்த வெளிநாட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்துள்ளார். அவர்களிடம் கடவுச் சீட்டு இருக்கின்றதா என பார்த்தபோது, அந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் அவை காணப்படவில்லை. இவர்கள் இந்தோனேஷியர்கள் என தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எதற்காக அங்கு தங்கியிருந்தனர் என மேலதிக விசாரணை செய்யப்பட்டது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் விசாரணை அதிகாரிகள் அறிக்கை கோரிய நிலையில் அவ்வறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி அவர்களுக்கு 2025 ஜனவரி 2 மற்றும் 3 ஆம் திகதிவரை விசா அனுமதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கியிருந்த பள்ளிவாசலில், அவர்களது ஆன்மீக நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளனர். எந்த ஒரு பிரசாரங்களையோ அல்லது சட்ட விரோத செயல்களையோ அவர்கள் முன்னெடுத்ததாக விசாரணைகளில் எந்த வெளிப்படுத்தல்களும் இல்லை. இவ்விசாரணைகளில் சுமார் 8 பேரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள போதும் எந்தவொரு குற்றச் செயலும் அதில் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே விசாரணைகளை நிறைவு செய்வதுடன் இந்த 8 பேரையும் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 120 (3) ஆம் அத்தியாயம் பிரகாரம் விடுவிக்குமாறு கோருகின்றேன்.’ என தெரிவித்தார்
இதற்கு முன்னதாகவே, நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட், சிந்தக்க மகநாராச்சி, சந்தீப கம எத்தி ஆகியோர் அடங்கிய குழு 21 பக்கங்களை கொண்ட எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைத்திருந்தது. அதில் மிகத் தெளிவாக குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் இந்த 8 பேர் தொடர்பிலும் வெளிப்படவில்லை என்ற விடயம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக பொலிஸார் பீ அறிக்கை ஊடாக கூறியிருந்த குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 10 ஆம் அத்தியாயத்தின் கீழான குற்றம் தொடர்பிலும் எந்த வெளிபப்டுத்தலும் இல்லை என இந்த எழுத்து மூல சமர்ப்பணத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரீட், சிந்தக்க மகநாராச்சி, சந்தீப கம எத்தி குழு சுட்டிக்காட்டியிருந்த நிலையில், டெனி எதிர் சிறினிமல் சில்வா வழக்குத் தீர்ப்பை முன்னிறுத்தி நீதிவான் பொலிஸாரின் இறப்பர் முத்திரையாக செயற்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனைவிட மேலும் பல வழக்குத் தீர்ப்புக்களையும் முன்னிறுத்தி 8 இந்தோனேஷியர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த 16 ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி வஸீமுல் அக்ரம் ஆகியோரின் அறிவுறுத்தல்கள் பிரகாரம் இந்தோனேஷிய பிரஜைகளுக்காக சட்டத்தரணிகலான சஜீவ கெளஷல்ய டயஸ், சிந்தக்க மகநாராச்சி, சந்தீப கம எத்தி ஆகியோருடன் சட்டத்தரணி ஷஹ்மி பரீட் ஆஜரானார்.
சட்டத்தரணி ஷஹ்மி பரீட் இதன்போது, ‘இவர்கள் ஆன்மீக சுற்றுலா எனும் அடிப்படையில் இலங்கைக்கு வந்த இந்தோனேஷிய நாட்டு முஸ்லிம்கள். இவர்களை கைது செய்து விசாரிக்கும் போது பொலிஸார் முறையான, அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி பெயர்ப்பாளரின் உதவியைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதனால் பிரச்சாரம், ஒன்றுகூடல் , அனுஷ்டானங்கள் போன்ற விடயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கு செல்லுபடியான கடவுச் சீட்டு மற்றும் வீசா இருப்பதால், இவர்கள் இலங்கைக்குள் எந்த சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை விசாரணையாளர்களே ஏர்றுக்கொண்டுள்ள பின்னணியில் இவர்களை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 120 ( 3) ஆம் அத்தியாயம் பிரகாரம் அவர்களை விடுவிக்குமாறு கோருகின்றேன்.’ விடயங்களை முன் வைத்திருந்தார்.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரபுத்திகா நாண்யக்கார,
‘ இந்த விவகாரத்தில் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் மன்றுக்கு விடயங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன. இப்போது முறைப்பாட்டாளர் தரப்பு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 120 (3) ஆம் அத்தியாயம் கீழ் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பித்து, எந்த சட்ட விரோத செயற்பாடுகளும் நடக்கவில்லை என கூறியுள்ளனர். இவர்களுக்கு செல்லுபடியான கடவுச் சீட்டு மற்றும் வீசாவும் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 16 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, மத பிரச்சாரம், பிரசங்கம் செய்வது குற்றமாகும். அது அச்சட்டத்தின் 45 (1) ( அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அது தொடர்பில் முறைப்பாட்டாளர்கலிடம் அவ்வாறான விடயங்கள் ஏதும் வெளிப்பட்டுள்ளதா என வினவினேன். எனினும் அவ்வாறு எந்த குற்றங்களும் இடம்பெறவில்லை எனவும், மொழி பெயர்ப்பு சிக்கல் காரணமாக இதற்கு முன்னர் அது தொடர்பில் சில விடயங்கள் அறிவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் செல்லுபடியான கடவுச் சீட்டு, வீசா காணப்படும் நிலையில், எந்த சட்ட விரோத செயல்கள் குறித்தும் விசாரணையில் வெளிப்படுத்தப்படாத பின்னணியில் குற்றவியல் சட்டத்தின் 120 (3) ஆம் அத்தியாயம் பிரகாரம் இந்த நீதிமன்றம் விடுவிக்கின்றது. என அறிவித்து வழக்கை முடிவுறுத்தினார்.
உண்மையில் இந்த விவகாரத்தை வெறுமனே வீசா விதி மீறல் சம்பவமாக அல்லது தற்செயலாக பொலிஸார் கைது செய்ததன் விளைவாக பார்க்க முடியவில்லை. இதன் பின்னால் ஒரு சதி இருந்திருப்பதை இவ்விசாரணைகளின் ஆரம்பம் முதல் பார்க்கும் போது தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக இந்த விசாரணைகளை முன்னெடுத்த நுவரெலியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோரின் செயற்பாடுகள் இது தொடர்பில் சந்தேகிக்கத்தக்கது. குறித்த இந்தோனேஷியர்கள் விவகாரத்தில் வீசா பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தெரிந்துகொண்டே இதனை வேறு ஒரு கோணத்துக்கு திசை திருப்ப இந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழு முயன்றதாக தோன்றுகின்றது.
எனினும் இந்த விடயத்தில் மர்கஸ் மத்திய நிலையம் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை ஆகிய தலையீடு செய்து விடயத்தை கையாண்டிருந்தன. அத்துடன் மன்றில் ஆஜராகாத பல ஜனாதிபதி சட்டத்தரணிகள் இந்த விடயத்துக்கு தேவையான அறிவுறுத்தல்கள் உதவிகளை வழங்கியிருந்த நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான குழு முழு மூச்சாக இந்த விடயத்தில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டது.
குறிப்பாக எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத இந்த இந்தோனேஷியர்களை குற்றவாளிகளாக காட்ட பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எமக்கு கிடைத்த தகவல்கள் பிரகாரம், கடந்த 16 ஆம் திகதி வழக்கு மீள விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் வழக்கை ஒரே நாளில் முடிவுறுத்தலாம் என பிரதான பொலிஸ் பரிசோதகர் தரப்பில் இருந்து தகவல் பறிமாற்றப்பட்டுள்ளது. எனினும் குற்றம் எதுவும் செய்யாமல் எதற்காக இவ்வாறு பொலிஸ் தரப்பிலிருந்து மூன்றாம் தரப்பொன்றூடாக இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்க முயற்சிக்கப்பட்டன என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக எந்த நியாயமான காரணிகளும் இன்றி கைது செய்யப்பட்ட இந்த 8 பேருக்கும் பிணையளிப்பதை கூட தடுப்பதற்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இந்த பொலிஸ் குழு எந்த அடிப்படையும் இன்றி எதிர்த்திருந்தது.
அவ்வாறு அவர்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டிருப்பின் அதன் விளைவு முழு நாட்டு முஸ்லிம்களையும் வேறு விதமாக பாதித்திருக்கலாம். எனினும் குறித்த இந்தோனேஷிய பிரஜைகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவினர், பொலிஸாரின் குறித்த நிலைப்பாட்டை நிராகரித்துள்ளனர்.
செய்யாத குற்றத்தை ஏற்க முடியாது எனவும், அவ்வாறெனில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தால் சட்ட ரீதியாக அதனை எதிர்க்கொள்ள தயார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, இந்த சதி தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தகவல் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையிலேயே அவரின் ஆலோசனைக்கு அமைய 16 ஆம் திகதி வழக்கில், வழமையாக மன்றில் ஆஜராகும் நுவரெலிய பொலிஸ் அதிகாரிகளை தவிர்த்து, மத்திய மாகாண பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியாக செயற்படும் உதவி பொலிஸ் அத்தியட்சர் மன்றுக்கு அனுப்பப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் எந்த குற்றமும் அற்றவர்கள் எனபதை அறிவித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த நிலைமை மிக ஆபத்தானது. நுவரெலியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் தேவைக்காக இவ்வாறு நடந்து கொண்டார், அதன் பின்னணி என்பன குறித்து பொலிஸ் திணைக்களம் ஆராய வேண்டி உள்ளதுடன், முஸ்லிம் சமூகமும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் போது விழிப்புடன் செயற்பட வேண்டும்.
- Vidivelli -
Post a Comment