Header Ads



60 பில்லியன் ரூபாய்களை செலவழித்த கோட்டாபய


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் சீனாவில் இருந்து உயிர் உரம் இறக்குமதி மற்றும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தியதில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணைகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரசாயன விவசாயத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையால்,  விவசாயத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் 2021 இல் சீனாவின் Qingdao Seawin Biotech Group Ltd நிறுவனத்திடம் இருந்து  இலங்கை கரிம உரத்தை கொள்வனவு செய்தது.


இருப்பினும், கையிருப்பின் மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களால் மாசுபட்டதாகக் கண்டறியப்பட்டதைக் காரணம் காட்டி, அரச நிறுவனங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டன.


எனினும் சீன நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. குறித்த கரிம உரத்தை மீண்டும் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்றதுடன், உரத் தொகுதிக்கான கொடுப்பனவையும் கோரியது.


இதன்போது, குறித்த விவகாரம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வணிக ரீதியான சர்ச்சைக்கும், ராஜதந்திர சர்ச்சைக்கும் வழிவகுத்தது.



இந்த சர்ச்சையை தவிர்கும் வகையில், அரசாங்கம் 6. 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 1,382 மில்லியன்), சீன நிறுவனத்துக்கு செலுத்தியது.


இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த கணக்காய்வாளர் நாயகம், தனது அறிக்கையில், இந்தக் கொடுக்கல் வாங்கலில் விவசாய அமைச்சு, விவசாய இராஜாங்க அமைச்சு, கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் மற்றும் சிலோன் பெர்டிலைசர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், தமது கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக, குறித்த கொடுக்கல் வாங்கல் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று பிரதி விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் நாமல் கருணாரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


2021 இல் தோல்வியடைந்த இயற்கை விவசாயத் திட்டத்திற்கு அப்போதைய அரசாங்கம் 60 பில்லியன் ரூபாய்களை  செலவழித்தது என்றும் அவர் கூறியுள்ளார்


அப்போதைய அரசாங்கம், இரசாயன விவசாயத்தை தடை செய்து இயற்கை விவசாயத்தை நாடியதன் காரணமாக,  பயிர் விளைச்சல் குறைந்து இறுதியில் விவசாயிகளிடையே அமைதியின்மையை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.