எதிர்க்கட்சி முன்வரிசையில் 5 முஸ்லிம் உறுப்பினர்கள்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் முன்வரிசையிலுள்ள 20 ஆசனங்களில் ஐந்து ஆசனங்கள் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவதுகூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான தவிசாளர் குழாத்திற்கு உள்ளடக்குவதற்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர். இதில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் பெயர் குறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தன.
இதில் எதிர்கட்சிப்பக்கத்தில் முன்வரிசையிலுள்ள 20 ஆசனங்களில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய மக்கள் சக்தியின் கபிர் ஹாசிம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அக்கட்சி உறுப்பினர் தாஹிர், இலங்கை தொழிலாளர் கட்சியின் காதர் மஸ்தான் ஆகியோருக்கு முன் வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏனைய 15 ஆசனங்களில் 7 தமிழ் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கைத் தமிழரசுக்கட்சியை சேர்ந்த சிறிதரன், சாணக்கியன், யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு 17 இன் அர்ச்சுனா இராமநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் செல்வம் அடைக்கலநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் திகாம்பரம் ஆகிய 7 பேருக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஆளும் தரப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு மாத்திரம் சிறுபான்மை பிரதிநிதியாக முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவதுகூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான தவிசாளர் குழு நியமிப்பட்டுள்ளது. இதில் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, இம்ரான் மகரூப், திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கெளஷல்யா ஆரியரத்ன, சேன நாணாயக்கார, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்ஹ, அரவிந்த செனரத், கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் நேற்றுமுன்தினம் அறிவித்தார்.
-Vidivelli-
(எம்.ஆர்.எம்.வசீம்)
Post a Comment