அச்சமின்றி அதிகாரத்தை தாருங்கள், NPP போன்று SJB தனது வாக்குறுதிகளை மீறாது - சஜித்
தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் ஆதரவால் ஜனாதிபதி பதவியை பெற்று, அரசாங்கத்தை அமைத்து, தற்போது மாற்றமான விடயங்களை முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை கால எல்லைகளுடன் நடைமுறைப்படுத்துவதற்கு வாக்குறுதியளித்திருந்தோம். அந்த வாக்குறுதியை நாம் பாதுகாப்போம். இதற்குத் தேவையான மக்கள் ஆணையை வழங்குமாறு சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (11) மாலை ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் மத்திய கொழும்பு, புதுக்கடைப் பிரதேசத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கட்சிச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
🟩 கோட்டாபயவினதும் ரணிலினதும் வழியிலயே இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் பயணிக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு, 5 வயதுக்குட்பட்ட எடை குறைவான குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் திரிபோஷாவைப் பெற்று வருகின்றனர். மாதம் ஒன்றுக்கு 16 இலட்சம் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 664920 தாய்மார்களுக்கும் 925172 குழந்தைகளுக்கும் இது வழங்கப்பட்ட வருகின்றன. தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2403/53 மூலம் திரிபோஷ நிறுவனத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று 7 நாட்களுக்கு முன்னரே, திரிபோஷ நிறுவனத்தை மூடுவதற்கு அரச வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2022 இல் கோட்டாபய ஜனாதிபதி இந்த திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த போது ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக குரல் எழுப்பி தடுத்து நிறுத்தினோம். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியும் இதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அந்த முயற்சியையும் நாம் தோற்கடித்தோம். இன்று பாட்டாளி வர்க்கத்தின் ஜனாதிபதி என கூறும் அநுர குமார திஸாநாயக்க அரசாங்கமும் கோட்டாபயவினதும் ரணிலினதும் வழியிலயே சென்று திரிபோஷா நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வர்த்தமானியையும் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த விடயம் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டு வருவதால் அரசாங்கம் தற்போது இதற்கு வேறு கதைகளை கூறி வருகிறது. அவ்வாறு மூடும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையாயின் வெளியிட்ட அரச வர்த்தமானியை மீளப் பெறுமாறு கோரிக்கை விடுக்கிறோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க மேடை மேடையாக கூறியவை தற்போது ஜனாதிபதியாக அனைத்தும் பொய்யாகி, செயலில் நடத்திக் காட்ட தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளார். வரி குறைக்கப்படும், விலை சூத்திரங்கள் இல்லாதொழிக்கப்படும், உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணம் கொண்டு வரப்படும் என்று மேடைகளில் கூச்சலிட்டாலும், இறுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் சர்வதேச நாணயத்திடம் மண்டியிட்டு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அடிமையாகியுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சலுகைகளை வழங்குகிறார்.
ஆட்சிக்கு வந்ததும் மின்சாரக் கட்டணத்தை குறைப்போம், எரிபொருள் விலையை குறைப்போம், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைப்போம், கடவுச்சீட்டு வரிசையை ஒழிப்போம், வரியைக் குறைப்போம் என்று சொன்னார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வைத்துக் கொண்டும் இவை எதுவும் நடக்கவில்லை. பொருட்கள், அரிசி, தேங்காய் விலையை குறைக்க முடியாமல் தற்போது தேங்காய்க்கு வரிசைகள் கூட உருவாகியுள்ளன.
அன்று எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்து விட்டு, இன்று அதே விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, உயர் வர்க்கம் பயன்படுத்தும் டீசலின் விலையை மட்டும் குறைத்துள்ளனர். சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. இதெல்லாம் மக்களை ஏமாற்றும் கதைகள் ஆகும். ஆட்சிக்கு வந்த பிறகு வரியை குறைப்பதாக சொல்கிறார்களே தவிர குறைத்த பாடில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அந்தப் பேச்சுக்களின் பின்னர், உழைக்கும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆட தொடங்கியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஊடகங்களுக்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற அதிகாரம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்ட மக்கள் விரோத சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு, மக்கள் சார் உடன்படிக்கையை காண்போம்.
2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்த சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்த போதிலும், கடனை 2028 முதல் அதாவது 4 ஆண்டுகளில் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தானாகவே சென்று விருப்பம் தெரிவித்தது. இவ்வளவு மந்தமான, வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டால் நான்கு வருடங்களில் கடனை அடைக்க முடியாது. நான்கு வருடங்களில் கடனை அடைப்பதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இப்படியே தொடர்ந்தால், 2028 இதைவிடவும் வங்குரோத்தடைவோம். வரிச்சுமையைக் குறைக்கும் புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்ட முடியும் என்பதால், அதற்கான சந்தர்ப்பமும் ஏதுவான வேலைத்திட்டமும் எம்மிடம் காணப்படுவதால் பாராளுமன்ற பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் மத்தியில் அதிருப்தியின் அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த பாதையை வெற்றிப் பாதையாக மாற்றியமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் சொத்துக்கள் மீண்டும் ஏலம் விடப்படும். கடந்த அரசாங்கத்திடமிருந்தும் தற்போதைய அரசாங்கத்திடமிருந்தும் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்தபாடில்லை. எனவே சரியான மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாட்டை சரியான பாதைக்கு திருப்ப வேண்டும். பொருத்தமான தரப்பை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
Post a Comment