தமிழர் பகுதிகளில் NPP ஆசனங்களை கைப்பற்றியது எப்படி..?
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மட்டக்களப்பு தவிர அனைத்து தமிழர் பகுதிகளை அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
அநுர குமாரவின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக, தமிழர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதுள்ள விரக்தியும் அதிருப்தியுமே காரணம் என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா கூறினார்.
“தென்னிலங்கை மக்களைப் போலவே, வட, கிழக்கு தமிழ் மக்களும் மாற்றத்தை விரும்பியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, ஐக்கிய மக்கள் சக்திக்குக் கணிசம் ஆன ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது,” என்று தெரிவித்தார் சிவராஜா.
மேலும், தமிழர் பிரதேங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லா இடங்களிலும் பிரிந்து போட்டியிட்டதால், தமிழ் கூட்டமைப்பு இரண்டாக பிரிந்து, அதிலும் சுயேட்சை குழுக்கள் என பிரிந்து பல கோணங்களில் சென்றன. இதைப் பார்த்து அதிருப்திக்கு ஆளான மக்கள் தங்களுடைய கருத்தைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் அவர்.
குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்ககூடும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
“நாங்கள் உங்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம். வடக்கிற்கும், தெற்கிற்கும் வித்தியாசம் இல்லாத தீர்வை தருவோம்’ என்று ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரை மக்கள் மனதில் பெரிதாக எடுப்பட்டிருக்கின்றது.”
ஆகையால், ஜனாதிபதி தலைமையிலான கட்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கலாமே என்று மக்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா. மேலும், மலையகத்திலும் இதே நிலைதான் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். BBC
Post a Comment