தேசியப் பட்டியல் நிலைப்பாட்டை மாற்றிய சுமந்திரன்..? NPP உயர்தகு வெற்றியை பெற்றுள்ளது என்கிறார்
மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் கூட மூன்றில் இரண்டு பெருபான்மை கிடைக்கவில்லை. கட்சி தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர்.
ஆனால் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதனை தாண்டி 173 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதொரு உயர் தகு வெற்றியாகும்
அவர்கள் தேர்தல் அறிக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெட்ட தெளிவாக கூறியுள்ளார்கள். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போதான தேர்தல் அறிக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி காலத்தில் வரைபை பூர்த்தியாக்குவோம் என கூறி இருந்தார்கள். அந்த விடயங்களை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதனை சரியாக செய்யும் போது அவர்களுக்கு எமது கட்சியின் பூரண ஒத்துழைப்பு இருக்கும்.
மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும்.
இந்த தேர்தலில் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிட்டது. அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் ஒரு ஆசனம் ,திருகோணமலையில் ஒரு ஆசனம், யாழ் . தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தலா ஒரு ஆசனங்களை பெற்றுள்ளோம். ஆகவே இது எமக்கு தோல்வி அல்ல.
இந்த முறை நான் தெரிவாகவில்லை. மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் தொடர்ந்து தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயக்குவேன். பொறுப்புடன் மக்களுடன் சேர்ந்து இயக்குவேன்.
புதிய அரசியலமைப்புக்கு எமது உதவிகள் தேவைப்பட்டால், அதனை நான் நிச்சயம் செய்வேன்.
தமிழரசு கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. நான் மக்கள் மத்தியில் தேசிய பட்டியலில் செல்ல மாட்டேன் என கூறியுள்ளேன்.
ஆனாலும், தேசிய பட்டியல் விவகாரம் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தான் அமையும் என மேலும் தெரிவித்தார்.
யாழ். விசேட நிருபர்
Post a Comment