அம்பாறை முஸ்லிம்கள் NPP வழங்கும் வாக்குகள், முஸ்லிம் Mp யை கொண்டு வருமா..?
(உடையான்)
மக்கள் என்.பி.பி (NPP) மாய சுழற்சிக்குள் சிக்குண்டுள்ள இந்தக் காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு என்று கூறிவிட முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொத்துவில் கல்முனை சம்மாந்துறை தொகுதிகளில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அளிக்கப்பட்ட கிட்டத்தட்ட 40,000 வாக்குகள் இன்றைய காலகட்டத்தில் ஆகக் குறைந்தது அதன் அரை மடங்கால் அதிகரித்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
குறித்த அந்த 60,000 வாக்குகளும் ஏற்கனவே இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் வெறுப்பு ஏற்பட்டதனாலும் நாட்டில் புரையோடிப் போய் உள்ள ஏமாற்று அரசியலை மாற்ற வேண்டும் என்று அபிலாசையினாலுமே NPPக்கு அளிக்கப்பட இருக்கின்றது. இவ்வளவு வாக்குகளும் முஸ்லிம்கள் சார்பாக ஏதோ ஒரு கட்சிக்கு வழங்கப்படும் பொழுது நிச்சயமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆனால் அது நடக்க முடியாத ஒரு விடயம் ஏனென்றால் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பது இல்லை என்று மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த காலத்தில் மக்கள் எவ்வாறு அணிதிரண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பினார்களோ அதே போல் தான் இன்றும் இனம் தெரியாத NPP வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு முஸ்லிம் மக்கள் தயாராகி நிற்கின்றார்கள்.
இம்முறை முஸ்லிம் மக்கள் கிட்டத்தட்ட 60 தொடக்கம் 65 ஆயிரம் வாக்குகளை மூன்று தொகுதிகளிலும் அளிப்பதற்கு இருக்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெட்டத் தெளிவாக தெரிகின்றது. இருந்தாலும் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இவ்வாறு அளிக்கப்பட இருக்கின்ற பெருந்தொகையான வாக்குகள் எதுவித பிரயோசனமும் அளிக்காமல் போய்விடுமோ என்று சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றார்கள். ஏனெனில் 60 தொடக்கம் 65,000 வாக்குகளை திசைகாட்டிக்கு அளிக்கவிருக்கும் முஸ்லிம் மக்களிடையே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளும் தெளிவும் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறு தெளிவொன்று இல்லாமலும் குறிக்கோள் ஒன்று இல்லாமலும் அளிக்கப்படும் வாக்குகள் எமக்கான பிரதிநிதிகளை வழங்குமா அல்லது வழங்காதா என்ற கேள்விதான் இன்று பலரது மத்தியிலும் பலமாக எழுந்துள்ளது.
இந்தக் கேள்வி நியாயமான ஒரு கேள்வியாகத்தான் படுகின்றது ஏனெனில் அம்பாறைத் தொகுதியில் கடந்த முறை NPPக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் அதிகரிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த வாக்ககளை அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ஒருமித்து அளிக்கும் பொழுது கிடைக்க இருக்கின்ற இரண்டு ஆசனங்களும் அவர்களுக்கு(.அம்பாறைக்கு ) வருவதற்கே அதிகபட்ச வாய்ப்பு உண்டு. மூன்றாவது போனஸ் ஆசனம் கூட அந்தப் பிரதேசத்துக்கே செல்லலாம்.
மொத்தமாக NPP க்கு திகாமடுல்ல மாவட்டத்தில் கிடைக்க இருக்கின்ற வாக்குகளில் கிட்டத்தட்ட 50% வழங்க இருக்கின்ற பொத்துவில் சம்மாந்துறை கல்முனை தொகுதி முஸ்லிம் வாக்காளர்களின் பிரதிநிதிகள் நேரடியாக தெரிவு செய்யப்படாமல் விடுவது என்பதை ஒரு ஜனநாயக ரீதியான செயலாக எடுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற இருவர் அம்பாறையை சேர்ந்தவராக இருக்கும் பொழுது மக்களது தேவைகள் குறைகளை கண்டறிவதில் அவற்றை நிவர்த்தி செய்வதில் பல சிக்கல்கள் உண்டு குறிப்பாக பிரதேசம் மொழி என்பன இதற்கு தடையாக இருக்கும்.
எனவே சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் என் பி பி க்கு வாக்களிப்பவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒரு உடன்பாட்டினை ஏற்படுத்தி 1,3,7,10 என்ற இலக்கங்களில் கட்டாயமாக ஏதோ இரு இலக்கங்களுக்கு வாக்களித்து மூன்றாவது வாக்கை ஏனையவர்களுக்கு அளிப்பதன் மூலம் இப் பிரதேசத்தவர்கள் தங்களது பலத்தினை வெளிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களது வாக்குகள் என் பி பி க்கு அளிக்கப்பட்டு ஆற்றில் கரைத்த புளியாகி விடக்கூடாது.
Post a Comment