Header Ads



JVP யில் மாத்திரமே System Change நடந்துள்ளது, நாட்டில் பழைய முறையே தொடருகிறது


தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினாலும், இதுவரை குறித்த முறைமை மாற்றம் நிகழவில்லை. அவரது கட்சி, சின்னம், அணி மற்றும் அவர்களது சமூக வலைதள குழுமங்களிலயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த பழைய முறைமையே தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு மட்டக்குளி மக்களுடனான சந்திப்பொன்று  ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சி.வை.பீ.ராம்  அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


ஆட்சிக்கு வந்ததும் மின்சாரக் கட்டணத்தை குறைப்போம், எரிபொருள் விலையை குறைப்போம், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைப்போம், கடவுச்சீட்டு வரிசையை ஒழிப்போம், வரியைக் குறைப்போம் என்று சொன்னார்கள், இவை எதுவும் நடக்கவில்லை. பொருட்கள், அரிசி, தேங்காய் விலையை குறைக்க முடியாமல்  தற்போது தேங்காய்க்கு வரிசைகள் கூட உருவாகியுள்ளதாக தெரிவித்தார். அன்று எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்து விட்டு, இன்று அதே விலை சூத்திரத்தைப்  பயன்படுத்தி, உயர் வர்க்கம் பயன்படுத்தும் சுப்பர் டீசலின் விலையை மட்டும் குறைத்துள்ளனர். சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இதெல்லாம் மக்களை ஏமாற்றும் கதைகள் ஆகும். ஆட்சிக்கு வந்த பிறகு வரியை குறைப்பதாக சொல்கிறார்களே தவிர குறைத்த பாடில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், அந்தப் பேச்சுக்களின் பின்னர், உழைக்கும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளார். அவரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆட தொடங்கியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஊடகங்களு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.