Header Ads



ஆதம்பாவாவுக்கு தேசியப் பட்டியல் நியமனம், குழிபறிப்பு செய்த நயவஞ்சகர்களுக்கு பலத்த அடி


பிரதேசவாதங்களைத் தூண்டி சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்ட சாய்ந்தமருது மண்ணின் மைந்தன் ஆதம்பாவா அவர்கள் தேசிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் அவருக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் சுமார் 78000 முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திக்கு அணிதிரண்டு வாக்களித்திருந்த போதிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமல் போனமை எமது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.


முஸ்லிம் வேட்பாளர்களிடையான ஒற்றுமையின்மையும் குத்து வெட்டுகளுமே இதற்கு பிரதான காரணமாக சொல்லப்பட்டாலும் இந்நிலையை ஏற்படுத்துவதற்கு திசைகாட்டிக்குள் ஊடுருவிய வெளிச் சக்திகளின் சூழ்ச்சிகளே முஸ்லிம் வேட்பாளர்களின் பின்னடைவுக்கு காரணம் என்பது பரகசியமான உண்மையாகும்.


குறிப்பாக எமது கல்முனை தொகுதியில் எந்தக் கட்சியில் இருந்தும் எவரும் வெற்றியீட்டி விடக் கூடாது என்பதற்காக எனக்கு கழுத்தறுப்பு செய்த சில அரசியல் நயவஞ்சகர்கள் திசைகாட்டிக்குள் ஊடுருவி அக்கட்சியில் போட்டியிட்ட ஆதம்பாவாவுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கப்படுவதை தடுப்பதற்காக ஏனைய தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.


திசைகாட்டியில் ஆதம்பாவா அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக இருந்தும் சாய்ந்தமருது மண்ணைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு விடக் கூடாது என்ற அவர்களது பிரதேசவாத சிந்தனையே அவருக்கு இந்த நயவஞ்சகர்களால் குழிபறிப்பு செய்யப்பட்டது.


ஆனால் சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் வல்ல இறைவன் இப்போது அவர்களது எண்ணங்களை தவிடுபொடியாக்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ். குழிபறிப்பு செய்த அரசியல் நயவஞ்சகர்களுக்கு இது பலத்த அடியாகும்.


திட்மிட்டு சூழ்ச்சி செய்து - குழிபறிப்புகளை மேற்கொண்டு அநியாயமாக தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தின் உண்மைகளைப் புரிந்து கொண்டு ஆதம்பாவா அவர்களுக்கு தேசியப் பட்டியல் நியமனத்தை வழங்கியமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட நிறைவேற்று சபையினருக்கும் எமது மக்கள் சார்பில் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எந்த நோக்கத்திற்காக நான் இத்தேர்தலில் களமிறங்கினேனோ அந்த நோக்கம் ஆதம்பாவா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நிறைவேறியிருப்பது குறித்து ஆத்ம திருப்தியடைகிறேன்.


சாய்ந்தமருது மண் நீண்ட காலமாக இழந்திருந்த அரசியல் அதிகாரம் ஒன்று இப்போது கிடைத்திருப்பதையிட்டு இந்த மண் பிறந்த எவரும் மகிழ்ச்சியடையாதிருக்க முடியாது. இது எமது நீண்ட கால அவாவாகும். இந்த அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணமாக எமது பிரதேசம் பல இழப்புகளை சந்தித்துள்ளமை கசப்பான உண்மையாகும்.


ஆதம்பாவா அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை மூலமாக எமது சாய்ந்தமருது மண்ணின் அபிலாஷைகளும் பொதுவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள சமூகம் சார்ந்த பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.


நேரடி பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து நான் ஒதுங்கியிருப்பது போன்று சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஏனைய அரசியல்வாதிகளும் தமது கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டு ஊர் நலன் சார்ந்த விடயங்களை இளம் தலைமுறையினர் முன்னெடுப்பதற்கு வழி விட வேண்டும் என்பதுடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


ஆளும் அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரேயொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பம் மிகப் பெறுமதியானதாகும். சவால்கள் நிறைந்த கிழக்கு மாகாணத்தில் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்திருக்கும் ஆதம்பாவா அவர்களுக்கு அதற்கான தைரியத்தையும் சக்தியையும் வல்ல இறைவன் வழங்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன் மீண்டுமொரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.