யூதர் ஒருவருக்கு இஸ்ரவேலில்...
ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரவேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.
ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.
"இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார்.
"தப்பு...சேர்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார்.
"சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.
இஸ்ரவேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
அங்குள்ள அதிகாரி "இது என்ன?" என்று வினவினார்.
"தப்பு...சேர்...!இவன் யார்? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்! இவன்தான் பித்துப் பிடித்த மகா கொடியவன் லெனின்! இவனின் கொடுமையால்தான் நான் ரஷ்யாவை விட்டு வரவேண்டியதாயிற்று! நாளாந்தம் இவன் முகத்தைப் பார்த்து திட்டித் தீர்க்கவே இந்த உருவச்சிலையை என்னுடன் கொண்டுவந்தேன்." என்றார்.
இதைக் கேட்டு பெருமிதம் அடைந்த அதிகாரி "சரி, நீங்கள் போகலாம்." என்றார்.
தனது குடியிருப்புக்கு சென்ற ரஷ்ய யூதர், அந்த உருவச்சிலையை வீட்டின் முன் மண்டபத்தில் தெரியும் படியாக மாட்டிவைத்தார். பின்னர் தான் இஸ்ரவேல் தேசத்தில் குடியேருவதை முன்னிட்டு தனது நண்பர்களை, உறவினர்களை அழைத்து விருந்து படைத்தார்.
அங்கே வந்த விருந்தினர்கள் அந்த உருவச்சிலையைக் கண்டு "இவர் யார்?" என்று வினவினார்கள்.
"தப்பு மக்களே...! இது என்ன?" என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்." இது 24 கரட் கொண்ட 10 கிலோ கிராம் தங்கம்!
நான் இதை வரி ஏதும் கட்டாமல், சுங்கத்துறையிடம் சிக்காமல் சாதுரியமாக கொண்டு வந்தேன்." என பெருமையுடன் பதில் அளித்தார்.
கதையின் சுருக்கம்.
சாணக்கியம் என்பது: மக்களிடம் ஒரே விடயத்தை பற்பல விதமாக, அதுவும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் புரிய வைக்கும் சூட்சுமமாகும்!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment