ரணிலுக்கே தெரியாமல், கேம் அமைத்த ரவி - அசாத் சாலியும் எதிர்ப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், 2 தேசிய பட்டியல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.
குறித்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில், ஒரு ஆசனத்திற்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பதவிக்கான பெயரை புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையிலே, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன்படி தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் கட்சிகளின் அனுமதியின்றி தன்னிச்சையான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான தீர்மானம் நாளை அனைத்து தரப்பினரும் கூடி எட்டப்படவிருந்த நிலையில், கட்சியின் செயலாளர் தன்னிச்சையாக ரவி கருணாநாயக்கவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாட்டை அனுமதிக்க முடியாது எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தவறான தீர்மானம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளர் ஷமிலா பெரேராவின் கையொப்பமிடப்பட்ட கடிதம் மூலம் அவர் தமது பெயரை மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கட்சியின் தீர்மானத்திற்காகக் காத்திருக்காமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment