Header Ads



முஸ்லிம்களுக்கு வெட்டு விழுந்துள்ளது - இம்ரான் மகரூப்



- ஹஸ்பர் -

இந்தத் தேர்தல் காலத்திலேயே தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் விரோதப் போக்கை ஆரம்பித்தால் அவர்களது எதிர்கால 5 வருட ஆட்சி எப்படி பயங்கரமாயிருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள்  சக்தியின் தலைமை வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


புதன்கிழமை (06) மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தின் 6 அதிகார சபை மற்றும் ஆணைக்குழுக்களுக்கு தவிசாளர்களை நியமித்துள்ளார். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரே மாகாணம் கிழக்கு மாகாணமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்திலேயே அதுவும் இந்த தேர்தல் காலத்தில் முஸ்லிம்களுக்கு வெட்டு விழுந்துள்ளது என்றால் இந்நாட்டின் ஏனைய பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களது ஆட்சியில் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.


தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. இதனால் இம்மாகாண முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று சில வாரங்களுக்கு முன் நான் கருத்துத் தெரிவித்தேன். பல ஊடகங்கள் இதனை வெளியிட்டிருந்தன.


அந்த ஆபத்து இன ரீதியான புறக்கணிப்பு என்ற வகையில் மிக விரைவாக அதுவும் இந்தத் தேர்தல் காலத்தில் நடந்துள்ளது. மக்களிடம் வாக்கு சேகரிக்கும் இந்தக் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு வெட்டு என்றால் அவர்கள் முஸ்லிம்களது வாக்கு தமக்கு தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் என்று தானே அர்த்தம். இப்படியான சூழ்நிலையில் எப்படி தேசிய மக்கள் சக்திக்கு நாம் வாக்களிக்கலாம் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.


அது மட்டுமல்லாது அவர்களது அடுத்து வரும் 5 வருட ஆட்சிக்காலம் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துள்ளதாக இருக்கும் என்பதையும் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். உணர்வு அலைகளுக்குள் சிக்கி நமது பொன்னான வாக்குகளை அவர்களுக்கு அளித்து நமது கையால் நமது கண்ணை குத்திக் கொள்ளும் நிலையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.


இறைவன் நமக்கு பகுத்தறிவைத் தந்துள்ளான். சிந்தனை ஆற்றலைத் தந்துள்ளான். இவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி கூறும் சமத்துவ ஆட்சி இது தானா என்பதையும், சகல இன மக்களையும் அரவணைக்கும் ஆட்சி இதுதானா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு பொய் வாக்குறுதிகளை தந்து நமது வாக்குகளை அள்ளிச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமுகத்திற்கு இவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ள போதிலும் தேசிய மக்கள் சக்தியின் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளராவது இதுவரை இது குறித்து வாய் திறந்துள்ளார்களா என்பதை அவதானித்துப் பாருங்கள். கட்சியின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்து கொண்டு அவர்களால் சமுகத்துக்காக குரல் கொடுக்க முடியாது. அநீதிகளைத் தட்டிக் கேட்க முடியாது என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன உதாரணம் நமக்கு வேண்டும் என்பதை சிந்திக்கும் தருணம் இது.


இன்றைய இந்த சம்பவத்தை அறிந்த சில அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை சந்தித்து நாங்கள் மோசம் போய் விட்டோம். இவர்களது ஏமாற்று வார்த்தைகளை நம்பி தபால் வாக்குகளை இவர்களுக்கு அளித்து விட்டோம். இனியும் இவர்களோடு பயணிக்க முடியாது. எனவே, எங்கள் குடும்பத்தினரின் வாக்குகளை இக்கட்சிக்கு சேர விடாது தடுக்க வேண்டிய பாரிய தார்மீகப் பணி எங்களுக்கு உண்டு என்று கூறினார்கள்.


இந்த சமுகத்திற்காக சமுக அநீதிக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்துள்ளான். என்னால் முடிந்த வரை இந்தப் பணியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் யாருக்கும் எந்த சுக போகத்திற்கும் விலை போகாதவன். சமுக கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் ஒரே பாதையில் பயணித்து வருகின்றேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். 


எனவே, உங்களது பொன்னான வாக்குகளை வெறும் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு, பசப்பு வார்த்தைகளை நம்பி தேசிய மக்கள் சக்திக்கு அளித்து வீணாக்கி விடாதீர்கள். இது போன்ற அநீதிகளுக்கு எதிராவும், சமுகத்திற்காகவும் பேசக் கூடியவர்களையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பத் தயாராகுங்கள். அதற்காக என்னோடு இணைந்து உங்களது ஆதரவை வாக்குகள் மூலம் எனக்கு தாருங்கள் என்று அன்பான அழைப்பு விடுக்கின்றேன்  இவ்வாறு அவர் கூறினார்

No comments

Powered by Blogger.