Header Ads



ரூபவாஹிணியில் இம்தியாஸ் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

 
பாராளுமன்ற தேர்தல் 2024 பிரசாரம் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ள அரச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் பங்கேற்ற நிகழ்ச்சி இன்று (11.11.2024) ஆம் திகதி இன்று மாலை 5.45 மணி முதல் 6.00 மணி வரை ரூபவாஹிணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் இதுவாகும். 


நமது நாடு சர்வஜன வாக்குரிமை மற்றும் ஜனநாயக சமூகத்திற்கான இருப்பு தொடர்பாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த ஜனநாயக இருப்பில், நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் நாட்டில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் 14 ஆம் திகதி வாக்களிப்பதன் மூலம், நீங்கள் இரண்டு கடமைகளை நிறைவேற்றுகிறீர்கள்.


நாடு செல்ல வேண்டிய திசை, பின்பற்ற வேண்டிய தொலைநோக்கு, கொள்கை, வேலைத்திட்டம் மற்றும் அதை வழிநடத்தக் கூடிய சரியான அணியைத் தேர்ந்தெடுப்பது முதலாவது விடயமாகும். இரண்டாவதாக, அதற்குப் பிறகு அந்தக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட வேட்பாளர்களில் இருந்து பொருத்தமான மூன்று நபர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். 


தவறு செய்தவர்கள், ஊழல் செயல்களில் ஈடுபட்டவர்கள், குற்றங்களில் ஈடுபடுபவர்களை தெரிவு செய்வதை விட, தொலைநோக்கு பார்வையும், அனுபவமும், முதிர்ச்சியும் நடைமுறைத் திறனும் உள்ள பொருத்தமானவர்களை உங்கள் மாவட்டத்தில் இருந்து அனுப்பலாம்.


நல்லதொரு மாற்றத்திற்காக நாட்டுக்கு பங்களிக்கக்கூடிய சரியான நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.


அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் குறித்து கவனமாக சிந்தித்து பாருங்கள். அவர்கள் கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வை, தகுதி, அனுபவம், ஆற்றல், முதிர்ச்சி, நடைமுறைத் திறன் ஆகியன குறித்து யோசித்து நாட்டின் எதிர்காலத்திற்காக, பொறுப்புடன் உங்கள் முடிவை எடுங்கள்.


ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவடைந்த பின்னணியில் நாம் அனைவரும் இந்த பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறோம்.


இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பெரும் மக்கள் ஆதரவு தளம் இல்லாத அரசியல் இயக்கத்தின் பிரதிநிதி ஒருவர் இம்முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சம்பிரதாய அரசியல் கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் வாக்குகளை விட, மக்கள் அவருக்கு அதிக வாக்குகளை வழங்கியுள்ளனர் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


மக்களின் இந்த முடிவை ஐக்கிய மக்கள் சக்தி மதிக்கிறது. தேர்தல் முடிவுகளை வெளியிடும் உத்தியோகபூர்வ நிகழ்வில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு பொறுப்பை வெளிப்படுத்தியது மட்டுமன்றி, நாட்டின் நன்மைக்காக பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


ஐக்கிய மக்கள் சக்தி என்பதும் நமது நாட்டு அரசியலில் புதியதொரு அரசியல் இயக்கமாகும். நாம் பிரதிநிதித்துவப்படுத்திய பழைய முகாமில் இருந்த சம்பிரதாய அரசியலுக்கு எதிராக கடினமானதொரு உள்ளக போராட்டத்தினை நடத்தி, கிடைத்த வெற்றியின் மூலம் உருவாக்கப்பட்ட இந்நாட்டு அரசியலில் உருவெடுத்துள்ள புதிய அரசியல் இயக்கமாகும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த உண்மையாகும். 


பழைய முகாமில், உள்ளக ஜனநாயகத்தை ஒழிப்பதற்கும், கட்சியை தீவிர வலதுசாரி, பிற்போக்குத்தனமான பாதையில் செலுத்துவதற்கும் எதிராகவே அந்தப்

போராட்டம் நடந்தது.


ஐக்கிய மக்கள் சக்தி என்பது சமூக ஜனநாயக நிகழ்ச்சி நிரலுக்காக முன்நிற்கும் அரசியல் இயக்கமாகும்.


இன்று தீவிர இடதுசாரி போக்குகளையும், தீவிர வலதுசாரி போக்குகளையும் உலகின் பெரும்பான்மையானவர்கள் நிராகரிப்பதைக் காண்கிறோம். டெங்சியாவோ பெங்கிற்குப் பிறகு சீனா மாறியது. நரசிம்ம ராவுக்குப் பிறகு ஜவஹர்லால் நேருவின் இந்தியா மாறியது. கிழக்கு ஐரோப்பாவில் போலந்து, கிழக்கு ஜெர்மனி, யூகோஸ்லாவியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் மாறின. வியட்நாமும் மாறிவிட்டது. இந்த மாற்றங்களின் மூலம், சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேறி வருகின்றன.


நாமும் நமது நாட்டை சம்பிரதாய அரசியல் பாதையில் இருந்து விலக்கி புதிய வழியில் திசைமுகப்படுத்த வேண்டும்.


சம்பிரதாய அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும், சரியான பொருளாதார தொலைநோக்கும், வேலைத்திட்டமும், தயார் நிலையும், அனுபவமும், அறிவும், செயல் இயலுமை கொண்ட திறமையான குழுவொன்றையும் கொண்ட அரசாங்கம் நாட்டின் எதிர்காலத்தைப் புரிந்து கொண்டு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும். இதற்கு உலகில் முன்னுதாரணங்கள் உள்ளன. ஜெர்மனி ஒரு நல்ல உதாரணமாகும். ஒரு நாடாக, நாம் பொருளாதார ரீதியாக ஒரு பெரிய பாதாளத்தில் விழ்ந்து கிடக்கிறோம். உலகில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகள் பொருளாதார ரீதியாக மீண்டுள்ளன. 


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹிட்லர் காரணமாக தரைமட்டமாக்கப்பட்ட ஜெர்மனி, ஹிரோஷிமா, நாகசாகி வெடிகுண்டுகளின் சாம்பலால் புதையுண்ட ஜப்பான், அன்று "கூலித் தொழிலாளர்களின் நாடு" என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூர், போன்ற நாடுகள் இன்று உலகின் பொருளாதார ஜாம்பவான்களாக மாறியிருக்கின்றன. அவர்கள் தங்கள் நாடுகளை சரியான பொருளாதார பாதையில் வழிநடத்தியமையாலயே மீண்டு வந்துள்ளனர். 


உலகில் வீழ்ச்சி கண்டுள்ள நாடுகள் பயணித்த வழியில் அல்லாமல், உலகில் வெற்றி பெற்ற நாடுகள் பயணித்த அதே பொருளாதாரப் பாதையை நாமும் பின்பற்ற வேண்டும். 


ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஆயத்தம், தொலைநோக்கு, கொள்கை, திறமை, வேலைத்திட்டம் மற்றும் அனுபவம், ஆற்றல் மற்றும் முதிர்ச்சியுடன் கூடிய திறமையான குழு காணப்படுகிறது.


இந்தப் படுபாதளத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க Blue Print  என்ற பெயரில் ஆழமான, நடைமுறை ரீதியான பொருளாதார வரைபடத்தை மக்களுக்கு முன்வைத்துள்ளோம். 


ஒவ்வொரு புதன்கிழமையும், மக்கள் சார்பாக ஊடகங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க எங்கள் பொருளாதாரக் குழு தொடர்ந்து ஊடக சந்திப்புகளை நடத்தி வந்தன. 


பொருளாதாரத் திட்டம் மட்டுமல்ல, கட்சியின் அரசியல் குழுவை 27 குழுக்களாகப் பிரித்து, கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்று 27 பரப்புகளுக்கான எங்கள் கொள்கைகளையும் திட்டத்தையும் தயாரித்து முடித்தோம்.


பாராளுமன்றம் கூடாத ஒவ்வொரு வாரமும், இரண்டு நாட்கள், இதற்காக நடைபெறும் கலந்துரையாடல் சுற்றுக்களில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச காலை முதல் இரவு வரை கலந்து கொண்டு தமது பங்களிப்பை நல்கினார்.


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் இந்த வேலைத்திட்டங்கள், நாட்டில் காணப்படும் சிவில் சமூக அமைப்புகள், அந்தந்த விடயதானத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர், பல்கலைக்கழக சமூகம் உட்பட வெகுஜன அமைப்புகளுடன், இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட தொடர் கலந்துரையாடல் அமர்வுகள் மூலமே வகுக்கப்பட்டன. 


எமது இந்த தயார்படுத்தல்களின் அடிப்படையில், நாட்டை கட்டியெழுப்பும் பத்து அம்ச வேலைத்திட்டத்தையும் எமது கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.


ஆயத்தம், கொள்கை, வேலைத்திட்டம் மற்றும் கூட்டாகச் செயல்படும் திறமையான குழுவுடன், எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அந்தக் கொள்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுக்கும் அரசாங்கத்தை நிறுவுவதற்கே, ஐக்கிய மக்கள் சக்தியானது மக்களிடம் ஆணையைக் கேட்கிறது. இதன் மூலம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துக்கு இடையே காணப்படும் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமநிலையை பேண வகையிலான ஆட்சியை கட்டியெழுப்ப முடியும்.


வார்த்தைகளை விட செயல்கள் உன்னதமானது. புதிய ஜனாதிபதி தேர்வாகுவதற்கு முன், ஜனாதிபதியும் அவரது அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தெரிவித்த விடயங்களும், ஜனாதிபதியானதும் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளையும், நடவடிக்கைகளையும் தற்போது அவர்களிடம் இருந்து பார்க்கிறோம்.


உலகில் எந்த ஒரு நாடும் சர்வதேச நாணய நிதியத்தோடு இணைந்து முன்னேறியதில்லை, அந்தக் கடன் வலையில் நமது நாடு சிக்கிக் கொள்ளக் கூடாது, அதிகாரம் கிடைத்தவுடன் அந்த ஒப்பந்தங்களில் இருந்து விலகுவோம் என ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி கூறினார். ஆனால் இப்போது அவர்களின் நடத்தை முற்றிலும் எதிர்மாறாக காணப்படுகிறது. 


பாராளுமன்றத்தில் கூடிய அதிகாரம் ஊழலுக்கும் சர்வாதிகாரத்துக்கும் வழிவகுக்கும் என்று கூறிய தற்போதைய ஜனாதிபதி, பாராளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி தேவையில்லை என்றும், தனது கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும் என்றும் அறிக்கைகளையும் ஊடக விளம்பரங்களையும் வெளியிட்டு வருகின்றார்.


அன்று ஊடக சுதந்திரம் குறித்து உரத்துப் பேசிய இந்த தரப்பினர், ஊடகங்கள் புது ஆடை அணிய வேண்டும், அபரிமிதமான சுதந்திரத்திற்கு இடமளியோம் என முரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளதை ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே நாம் பார்க்கிறோம். 


மேலும், அரச ஊழியர்களின் சம்பளம், ஆசிரியர்களின் சம்பள உயர்வு, நேரடி மற்றும் மறைமுக வரி திருத்தம் போன்றவற்றுக்கு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய தலைவர்கள் இன்று வேறு தொனியில் பேசுகின்றனர்.


தொழிற்சங்கங்களை பொதுவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்த வைத்து, கோஷம் எழுப்பியும், வேலைநிறுத்தம் என்று மிரட்டியும் இருந்த தலைவர்கள், இன்று தொழிற்சங்கங்களை கலைத்து, வேலை நிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என்று பேசுகின்றனர்.


தொழிற் சங்கங்களை கலைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் பகிரங்கமாக கூறுகின்றனர். உலக நாடுகள் அங்கீகரித்த, உலக நாடுகள் ஜனநாயக உரிமையாக அங்கீகரித்த தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும், அவர்களது உரிமைகளுக்குமே இன்று அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆளும் தரப்பினர் சவால் விடுக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் சாசனத்துக்கே இவர்கள் இவ்வாறு சவால் விடுக்கின்றனர்.  இன்று பிறக்கும் குழந்தைகள் வளரும்போது, ​​தொழிற்சங்கங்கள் என்றால் என்ன?, வேலைநிறுத்தம் என்றால் என்ன? என கேட்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். இந்த அறிக்கையின் மூலம் ஜனநாயக பாரம்பரியத்திற்கே இவர்கள் சவால் விடுகின்றனர். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு சவால் விடுக்கின்றனர். ஊடக சுதந்திரத்திற்கும் சவால் விடுக்கின்றனர். 


தேர்தல் காலத்தில் கூறிய முறைமை மாற்றத்தை விடுத்து, சம்பிரதாய போக்குக்கு  மற்றவர்களை விட இன்று அவர்களே வேகமாக தகவமைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.


முடியாததைச் சொன்ன தலைவர்கள் சொல்லும் அறிக்கைகள் விதியின் கேலிக்கூத்து அல்லவா?


தேர்தலுக்கு முன் கூறியது போல், திருட்டு மற்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஜனாதிபதி உண்மையானவராக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் ஜனாதிபதிக்கு சிரமம் இருக்காது.


சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட ஜனாதிபதி விடுத்த கதைகள் உண்மையானதாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் சிரமம் இருக்காது.


நமது நாட்டை உலகில் வெற்றிகரமான நாடுகள் பயணித்த பாதைக்கு கொண்டு வந்து, சரியான நடைமுறை சார் பொருளாதார திட்டத்துடன் நாட்டை கட்டியெழுப்புவது ஜனாதிபதியின் உண்மையான நோக்கமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.


அபிவிருத்தி கண்ட ஜனநாயக நாடுகளில் இதற்கு பல வெற்றிகரமான முன்னுதாரணங்கள் காணப்படுகின்றன. இருதரப்பிலும் இருந்த இரண்டு பிரதான கட்சிகளும் புரிந்துணர்வுடன் இணைந்து தெளிவான பொருளாதாரப் பாதையில் சென்றதை நாம் பார்த்தோம்.


நமது நாடு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. நாங்கள் இன்னும் கடனை செலுத்தத் தொடங்கவில்லை.

டொலர்களில் செலுத்த வேண்டிய கடன்கள் இன்னும் காணப்படுகின்றன. டொலர்களில் செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்கான வருவாயை அதிகரிக்க திருப்திகரமான சூழ்நிலை இன்னும் இங்கு ஏற்படவில்லை.


அன்றைய காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலாப் பொருளாதாரம், ஆடைப் பொருளாதாரம், தேயிலை, தென்னை, இரப்பர் போன்றன வருமான மூலங்களே இன்றும் காணப்படுகின்றன. நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் வாழ்கிறோம்.

நாங்கள் சுவர்களைக் கட்டிக் கொண்டு எம்மால் தனித்து வாழ முடியாது. 


நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உலக நாடுகளுடன் இணைந்து பயணிக்க வேண்டும். இதற்கான கால எல்லைகளை வகுத்து நிலையான வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் முன் வைத்துள்ளது. இந்த நெருக்கடியானது நமது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் மிகவும் எதிர்மறையாக பாதித்துள்ளது.


நாட்டின் வளர்ச்சிக்கு இணையாக, இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொண்டு, நடைமுறை ரீதியான பாதைக்கு நமது எமது நாட்டை இட்டுச் செல்ல வேண்டும்.


2023 (W.F.P) உலக உணவுத் திட்டத்தின் அறிக்கைகளின்படி, நமது நாட்டின் மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானோர் உணவில் கடுமையான பிரச்சினையைக் கொண்டுள்ளனர். உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) ஆகியவற்றின் 2023 அறிக்கையும் இந்த நிலையை உறுதிப்படுத்துகிறது.


இந்த நெருக்கடியிலிருந்து விடுபட ஐக்கிய மக்கள் சக்தி, நீண்ட காலமாக அர்ப்பணித்து, வகுத்து, முன்வைத்துள்ள வேலைத்திட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் தயார்நிலையை பிரதிபலித்து காட்டுகிறது. இதற்கான சிறந்த அணியினரும் ஐக்கிய மக்கள் சக்தியில் காணப்படுகின்றனர். 


எனவே, உங்கள் முன் எம்மால் வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தையும், ஏனைய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் அவற்றை ஆராய்ந்து, நாட்டின் நலனுக்காக அறிவார்ந்த முடிவை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


சோபனக் கதைகள், கவர்ச்சியான முழக்கங்கள் மற்றும் செயற்கையான அலைகளை ஏற்படுத்தி மக்களை இனியும் அலைக்கழிக்க முடியாது.


முடிப்பதற்கு முன், ஒரு சுருக்கமான நினைவூட்டலைச் செய்ய விரும்புகிறேன்.


நாங்கள் சம்பிரதாய அரசியல் கட்சி அல்ல. பழைய சம்பிரதாய முறைகளை உடைத்து முன்னோக்கி வந்த கட்சியும் அரசியல் இயக்கமுமாகும். நாங்கள் கனவு காணும் புதிய அரசியல் கலாசாரத்தில், ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ஜனாதிபதியைக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாட்டின் நலனுக்காகவும், உங்கள் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்ற முடியும் என நம்புகிறோம். எனவே அந்த நம்பிக்கையுடன் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாமும் பங்களிப்பு செய்வோம். 


இந்த நாட்டில் பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்களிடையே குறுகிய பேதங்களை மறந்து வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தி, உலகில் தோல்வியடைந்த நாடுகளின் பாதையில் செல்லாமல், உலகில் வெற்றி கண்ட நாடுகள் பயணித்த பாதையில் நமும் எமது நாட்டை இட்டுச் சென்று, அபிமானமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப, ஐக்கிய மக்கள் சக்திக்கு வலுவான அரசாங்கத்தை பெற்றுத் தர உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


எமது நாட்டுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.

No comments

Powered by Blogger.