சகல சமூகத்தினரினதும் நலன்கருதி ஒன்றாகப் பயணிப்போம் - ஹக்கீம்
"நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், இறைவன் அருளால் கண்டி மாவட்டத்தில் எனக்கு வாக்களித்து, மீண்டும் எனது வெற்றியை உறுதி செய்ததோடு, அங்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முதலாவது தெரிவுக்கான விருப்பு வாக்கினால் என்னை கண்ணியப்படுத்தியு முள்ளீர்கள்".
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள நன்றி தெரிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த வெற்றிக்காக எனக்கு ஆதரவளித்த கண்டி மாவட்ட உலமாப் பெருமக்கள், ஏனைய சமயத் தலைவர்கள்,அரச மற்றும், தனியார் நிறுவன அலுவலர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அதற்கும்
அப்பால் பொதுவாக எனது அரசியல் செல்நெறியோடு ஒன்றித்துப் பயணிக்கின்ற சகோதர சமூகத்தவர்களான சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாவதாக.
எனது கடந்தகால அரசியல் பணிகளிலும், என்னிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து கணிசமான வாக்குகளை எனது வெற்றிக்காக வழங்கியுள்ளீர்கள்.
இந்தத் தேர்தலில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை(திகாமடுல்ல), மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த இரு மாவட்டங்களிலும் வாக்களித்து பாராளுமன்ற பிரதிநிதிகளாக ஒவ்வொருவர் வெற்றிபெறவும் ,அவற்றில் கட்சிக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளினூடாக தேசியப் பட்டியல் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவும் வழிவகுத்து, எமது தனித்துவம் காத்த கட்சியின் வாக்காளர்கள்கள் மற்றும் ஆதரவாளர்கள்
ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவ்வாறே, திருகோணமலை, புத்தளம், குருநாகல், வன்னி ஆகிய மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அதன் தொலைபேசி சின்னத்திலும் போட்டியிட்டோம். அவற்றில் போட்டியிட்ட எமது கட்சி சார்ந்த வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டாவிட்டாலும் கூட, கணிசமான வாக்குககளை அளித்து அவர்களையும் வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன் வாக்களித்துள்ளீர்கள்.
மேலும், தேர்தலில் வெற்றி, தோல்வி என்பன இயல்பானவை. நமக்கு அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தேவை. இந்த வெற்றி - தோல்விகள், தலைமைத்துவக் கட்டுக்கோப்புடன் கையாளப்பட வேண்டும். ஒற்றுமையுடன் அரசியல் பாதையில் தொடர்ந்தும் பயணிக்க எத்தகைய தடைகளையும், முரண்பாடுகளையும் உருவாக்கிவிடக்கூடாது என்ற புரிதலுடன் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு நாட்டினதும்,இங்கு வாழ்கின்ற சகல சமூகத்தினரினதும் நலன் கருதி ஒன்றாகப் பயணிப்போம் என்றுள்ளது.
Post a Comment