Header Ads



A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளது ஆடை - உரிமையை உறுதிப்படுத்துவாரா பிரதமர் ஹரினி..?


அஷ்ஷெய்க் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)


உயர்தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளது ஆடை விவகாரத்தில் அரச சுற்றுநிருபத்தினை அமுல்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுமா?


எதிர்வரும் 25-11-2024 முதல் இலங்கையில் உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற ஏற்பாடாயிருக்கிறது. பரீட்சையில் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்களையும், வளமான பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தேசிய பரீட்சைகள் வரும்போது கடந்த பல வருடங்களாக, முஸ்லிம் மாணவிகளின் ஆடை விவகாரம் சில பரீட்சை மண்டபங்களில் வைத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருதும், இதனால் முஸ்லிம் மாணவிகள் சங்கடங்களுக்குள்ளாவதும் வழமையாகிவிட்டது.


உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாரிய எதிர்பார்ப்போடு, ஒருவித மனதயக்கத்தோடே முகம்கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவிகள் இதில் ஓரளவு அதிகமான மனஅழுத்தத்துடனும், பயத்துடனுமே பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர்.


இவ்வாரான நிலையில் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையின் போது முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கும் ஆடை குறித்த (பர்தா-தலையை மறைக்கும்) தெளிவான நிலைப்பாட்டை கல்வி, உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூர்ய அவர்கள் பரீட்சை ஆணையாளருக்கும், பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுருத்தல்கள் வழங்க அவரச நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடந்த காலங்களில் பரீட்சை மண்டபத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவிகளது பர்தாக்கள், பரீட்சை மண்டப அதிகாரகளால் களையப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பரீட்சைக்கு தோற்றாமல் இருந்ததாகவும் கடந்த காலங்களில் பேசப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களது பிள்ளைகள் பெரும்பாலான ஆண் பரீட்சாத்திகளுடன் (வகுப்பறைகளில்) அமர்த்தப்பட்டு பரீட்சைக்கு தோற்ற பணித்துள்ளனர். இதனால் அம்மாணவிகள் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.


எனவே மாணவர்களுக்கு தங்களது பாடசாலை சீருடையோடு பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான சட்டபூர்மான அனுமதியினை (சுற்றுநிருபத்தை) அரசு வழங்கியிருக்கும் போது, அதற்கு மாற்றமாக செயல்படும் அதிகாரிகள் தண்டிக்கப்டவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா (தலை மற்றும் காதுகள் மறைக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை சீருடை) அணிந்து வருவதால் அவர்கள் கதைப்பதாகவும், Headset போன்றவற்றை பயண்படுத்துவதாகவும், பர்தாவினுள் பார்த்து எழுதுவதற்கான துனுக்குகளை மறைத்து வருவதாகவும் பரீட்சை மண்டப அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.


அவ்வாறான நிலைமைகளில் அதன் நம்பகத் தன்மை உறுதிப்டுத்தப்பட்டால், அவ்வாரு பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் மாணவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது பரீட்சை தடைசெய்யப்பட்டு, பரீட்சைகளில் தோற்றுகின்ற அவகாசம் மறுக்கப்படவும் வேண்டும்.


நேற்றைய (18-11-2024) தினம் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவிகள் 21 பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், ஒரு முஸ்லிம் உறுப்பினருக்காவது அவ்வாரான ஓர் அமைச்சுப் பதவியை வழங்காத இந்த அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை சற்று தளர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளின் போதாவது முஸ்லிம் மாணவிகளது ஆடைவிவகாரத்தில் அரச சுற்றுநிருப்த்தின்படி பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பார்களா? என்று எதிர்பார்த்திருக்கின்றனர்.


இப்போது தேசிய மக்கள் சக்தியே ஆளும் கட்சியாக இருக்கின்றது என்று சாக்குபோக்கு கூறாமல், எதிர்கட்சிகளில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருக்காமல், இம்மாணவர்கள் தோற்றும் பாடசாலைமட்ட இறுதிப் பரீட்சையாகவும், தங்களது எதிர்காலத்தை தீர்மாணிக்கின்ற மிக முக்கியமான பரீட்சையாகவும் இது இடம்பெற இருப்பதால் இதுவிடயத்தில் அக்கரை செலுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு வேண்டிக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.