Header Ads



ஒழுக்கக்கேடான நடத்தை, கேவலமான அரசியல் - சீறிப்பாயும் தேர்தல்கள் ஆணையாளர்


அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கதெளிவுபடுத்தியுள்ளார். 


கட்சியின் செயலாளர் ஒருவரிடமிருந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான நியமனத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர், சட்டரீதியாக வர்த்தமானியில் அவரது பெயரை வெளியிடுவதே ஆணைக்குழுவின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ரவி கருணாநாயக்க கையாண்டதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று நடத்திய விசாரணைக்கு பதிலளித்த ஆணையாளர் நாயகம், வர்த்தமானியில் திருத்தம் செய்வதற்கான எந்தவொரு முடிவையும் நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என விளக்கமளித்தார்.


பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால், தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கட்சியின் செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட புதிய பெயரை மீண்டும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சட்டபூர்வ அதிகாரம் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


"இந்த நிலைமை நாகரீகமற்ற அரசியலின் விளைவாகும், அங்கு அரசியல் அறநெறி இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்ற கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிகளை உருவாக்குகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.


கட்சிக்குள் உள்ள உட்பூசல்கள் எதுவாக இருந்தாலும், கட்சியின் செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட பெயரை வர்த்தமானியில் வெளியிடுவதுடன் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு முடிவடைகிறது என்று அவர் வலியுறுத்தினார்.


“ஒரு கட்சியின் உள் விவகாரங்கள் எங்களுக்குப் பொருத்தமற்றவை. கட்சியின் செயலாளர் எமக்கு பெயர் அனுப்பிய பின்னர், கட்சி உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது எமது கவலையல்ல. கட்சியில் ஒழுக்கமோ, நாகரீகமோ இல்லாவிட்டால், அது அவர்கள் தமது பிரச்சினையை தீர்க்க வேண்டும்,'' என்றார்.


கட்சியின் செயலாளர் ஷர்மிலா பெரேரா தேசிய பட்டியலின் பெயரை ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர் கட்சியின் உள்ளக முடிவுகளை ஆராய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


“அவர்களது கட்சிக்குள் எந்த ஒரு கேவலமான அரசியலுக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அந்த பிரச்சினைகளை அவர்களே தீர்க்க வேண்டும். இந்த கட்சிகள் தங்கள் சொந்த அணிகளுக்குள் ஒழுக்கம் இல்லாதபோது எப்படி ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகிறார்கள்..!


எந்தவொரு தவறான நடத்தை உரிமைகோரல்களும் சட்ட வழிகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி முடித்தார் அவர்.


“ஷர்மிலா தவறாகச் செயல்பட்டால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் தீர்வு காண நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். எங்கள் தரப்பில் இருந்து, நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிடாவிட்டால், இந்த வர்த்தமானியை ரத்து செய்ய எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. இந்த வர்த்தமானி சம்பந்தப்பட்ட நபருக்காக வெளியிடப்படவில்லை, மாறாக கட்சியின் செயலாளரின் நியமனத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது, ”என்று ஆணையாளர் நாயகம் விளக்கினார்.

No comments

Powered by Blogger.