Header Ads



JVP மன்னிப்பு கேட்க வேண்டும் - ரணில்


தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


“ஐ.தே.க சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்” என கொட்டகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.


"அந்த நேரத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட போது, ​​ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர அதை கடுமையாக எதிர்த்தார்," என்று அவர் நினைவு கூர்ந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) தோட்ட சமூகத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளையும் வலியுறுத்தினார்.


1947 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதுடன், இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நாங்கள் எப்போதும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


1986 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் இந்திரா காந்தி ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் கீழ், இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாதவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். "இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாத அனைவருக்கும் நாங்கள் குடியுரிமை வழங்கினோம்" என்று விக்கிரமசிங்க விளக்கினார்.


அந்த நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஜேவிபி மறுத்ததை விமர்சித்த அவர், “அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்த ஜேவிபிக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.