வெற்றியின்பின் முனீர் முலபர் தெரிவித்த விடயங்கள்
- இஸ்மதுல் றஹுமான் -
இன நல்லிணக்கத்தின் அடையாளமே எனது வெற்றி. எனது வெற்றிக்காக பங்களிப்புச்செய்த கம்பஹா மாவட்ட சகல இன மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ் ஷேய்க் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் பத்தாம் இலக்கத்தில் போட்டியிட்ட முனீர் முளப்பர் 109,815 விருப்பு வாக்குகளை பெற்று 5ம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தே.ம.ச.கம்பஹா மாவட்டத்தில் இருந்து 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தேர்தல் வரலாற்றில் கம்பஹா மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் பெற்ற அதி கூடிய விருப்பு வாக்கு இதுவாகும். அதே போல் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு சிறுபான்மை உறுப்பினரோ, சிறுபான்மை கட்சித் தலைவர்களோ ஒரு இலட்சத்தைத் தாண்டிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை.
அந்த வகையில் முனீர் முளப்பரின் வெற்றிக்காக இன வாதத்திற்கு அப்பால் இன வேறுபாடின்றி சகல இனத்தவர்களும் அவருக்கு வாக்களித்துள்ளமை தெளிவாகின்றது.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
எமது கட்சியான தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையக சகல பிரதேசங்களையும் சேர்ந்த சகல இன மக்களினதும் பெரும் ஆதரவுடன் இந்த வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை வரலாற்றில் எந்த ஒரு தனிக்கட்சியும் இவ்வாறான வெற்றியை இதற்கு முன்னர் பெற்றுக்கொண்டதில்லை. அரசியல் தலைமைகள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.
எனது வெற்றிக்கு சகல இன மக்களும் உதவி செய்தனர். சகல மதத் தலைவர்களினதும் ஆசிர்வாதம் கிடைத்தன. இதற்காக நான் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க இச்சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது ஆபரணமல்ல. அது ஒரு பொறுப்பு என்பதனை விளங்கியுள்ளேன். அந்தப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவேன். இன நல்லிணக்கத்திற்காக கட்சியின் மூலம் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து இனநல்லுறவை பேனுவோம் எனத் தெரிவித்தார்.
Post a Comment