Header Ads



சவூதியின் சுகாதாரத் துறைக்கு, மனித வளங்களை வழங்க தயார் - இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்


சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர் ரஹ்மான் அல்-ஜலாஜெல் அவர்கள், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 


சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை அன்பாக வரவேற்ற அமைச்சர் பஹ்த், சவுதி விஷன் 2030 இன் கீழ் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்கான சவுதி அரேபியாவின் முயற்சிகள் குறித்து விளங்கியதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார். 


சுகாதாரத் துறையில் இலங்கையின் வெற்றிகரமான அடைவுகளை எடுத்துரைத்த தூதுவர் அமீர் அஜ்வத், இரு நாடுகளுக்கும் இடையிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தாதியர்கள் உட்பட இலங்கை சுகாதார நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததோடு, சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறைக்கு மனித வளங்களை வழங்குவதில் மேலும் ஒத்துழைப்பு வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


சுகாதார அமைச்சர் ஃபஹத் சவுதியின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான கவுன்சிலின் உறுப்பினராகவும், சுகாதாரப் பாதுகாப்புக்கான திட்டக் குழுவின் தலைவராகவும் உள்ளார். அவர் சவுதி ஹெல்த் கவுன்சில், சுகாதார சிறப்புகளுக்கான சவுதி கமிஷன் மற்றும் உணவு மற்றும் மருந்துகளுக்கான பொது ஆணையம் உட்பட பல நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார்.


தூதுவர்  அவர்களுடன் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அமைச்சர் / தூதரகப் பிரதானி மொஹமட் அனஸ் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.