நேரடி அரசியலில் இருந்து விடைபெறுகிறேன் - AM ஜெமீல்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு மனமுவந்து வாக்களித்த என்றும் என் அன்புக்குரிய அனைத்து இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிப் பூக்களை காணிக்கையாக சொரிகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
அத்துடன் எனது வெற்றிக்காக மாவட்டம் பூராவும் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் களப் பணியாற்றிய எனது நேசமிகு செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் விசேடமாக உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவப் பருவத்தில் இருந்தே சமூகப் பணியில் கரிசனையுடன் செயலாற்றி வந்த நான் - எனது சாய்ந்தமருது மண்ணுக்கும் கல்முனை தொகுதிக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் எமது தேசத்திற்கும் சமூகத்திற்கும் அரசியல் அதிகாரத்தின் ஊடாக முடியுமானளவு தொண்டாற்ற வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் இத்தேர்தலில் களமிறங்கியிருந்தேன்.
கல்முனை தொகுதியின் பிரதிநிதித்துவம் இழக்கப்போகும் அபாயத்தை உணர்ந்தே உடல் நலம் முழுமையாக தேறாத நிலையிலும், இறுதி நேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டு மக்கள் மன்றத்தில் தோன்றி - அரசியல் கள நிலைவரங்களை எடுத்துக் கூறி மன்றாடினேன்.
ஆனால், அநுர அலையில் சிக்குண்ட கணிசமான மக்கள் எவ்வித தூரநோக்கு சிந்தனையுமின்றி மாற்றம் என்ற சொல்லாடல் மாயைக்குள் வீழ்ந்து திசைகாட்டிக்கு வாக்களித்து விட்டு கைசேதப்பட்டு புலம்பிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
கண் முன்னே எமக்கான வெற்றி வாய்ப்பு மலைபோல் தெரிந்திருந்தும் சிலரது பிழையான வழிகாட்டல் காரணமாக எம்மைப் புறந்தள்ளி விட்டு - மாற்றம் வேண்டி வாக்களித்து - நமக்கான பிரதிநிதித்துவத்தை பறிகொடுக்கும் வரலாற்றுத் தவறை செய்து விட்டோம் என்று இப்போது கைசேதப்படுவதில் பயனில்லை.
மேலும், எனது வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உத்தரவாதமளித்து விட்டு இறுதி நேரத்தில் கழுத்தறுப்பு செய்வதற்கு திசை காட்டியை ஓர் ஆயுதமாக பயன்படுத்திய நயவஞ்சகர்களின் துரோகத்தனத்தை இறைவனிடமே பாரம்சாட்டுகின்றேன்.
எவ்வாறாயினும் எனது அரசியல் வகிபாகத்தை நிராகரித்த மக்களின் நிலைப்பாட்டை மனமுவந்து ஏற்றுக் கொண்டு - நேரடி அரசியலில் இருந்து விடைபெறும் தீர்மானத்தை கனத்த இதயத்துடன் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
எனக்கு வாக்களித்த அன்புள்ளங்களுக்கும் வாக்களிக்காமல் நிராகரித்த மக்களுக்கும் மீண்டுமொரு முறை நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
எனது தேகாரோக்கியத்திற்காக உங்கள் துஆக்களில் என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
ஏ.எம்.ஜெமீல்
Post a Comment