Header Ads



அமைச்சரவை கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம் (முழு விபரம்)


1, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 08 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுகின்ற வகையில் அபிவிருத்தியின் ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கான வரவு செலவுத் திட்டமாக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் புதிய அரசு எதிர்பார்க்கின்றது.


அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள செலவீன மட்டுப்பாடுகளுக்கிணங்க, அரச கொள்கை வரைபுக்கமைய, அமைச்சின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்களால் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அனைத்து அமைச்சுக்களிலிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025.01.09 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட விவாதம்) 2025.02.17 அன்று நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்புக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025.02.27 அன்று தொடக்கம் 2025.03.21 அன்று வரை நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


2. பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் (Supplementary Estimates) சமர்ப்பித்தல்

2024 ஆம் ஆண்டின் தொடர்ந்து வரும் காலத்தில் ஒருசில அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளல் மற்றும் கணக்கீடு செய்வதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதற்கிணங்க, அடையாளங் காணப்பட்டுள்ள ஒருசில செலவுகளை 2024 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட செலவின மதிப்பீட்டுக்கு உட்பட்ட வகையில் நிதியொதுக்கீட்டை ஏற்பாடு செய்வதற்கு இயலுமை காணப்படுவதுடன், 2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த செலவு எல்லையை விஞ்சாத வகையிலும் மற்றும் அரசு கடன்பெறும் உயர்ந்தபட்ச எல்லைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இணக்கங்களை மேற்கொள்வதற்கான இயலுமை உள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் பணிகளுக்காக ரூ. 219,373 மில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


(i) இலங்கை அரச ஐந்தொகைக்கு மாற்றப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன் மீள்கட்டமைப்பு காரணமாக வங்கிகளுக்கு வழங்கப்படவுள்ள வட்டிச் சலுகைக் கொடுப்பனவுகளுக்காக அரச தொழில்முயற்சிகள் திணைக்களத்திற்கு ரூ. 130,000 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(ii) டொலருக்கு எதிராக ரூபாய் பலம் பொருந்தியதாக மாறியமையால் திறைசேரி பிரதிச் செயலாளரின் பெயரிலுள்ள டொலர் கணக்குகளில் காணப்படுகின்ற மீதியின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டுச் செலாவணி நட்டத்தை கணக்கு வைப்பதற்காக ரூ. 18,000 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(iii) சிரேட்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி வீதம் வழங்கப்பட்டமையால் வங்கிகள் செலுத்தியுள்ள மேலதிக வட்டியை ஈடுசெய்து கொள்வதற்காக அபிவிருத்தி நிதித் திணைக்களத்திற்கு ரூ. 32,641 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(iv) சீன அரசின் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைத் துணியின் பெறுமதியைக் கணக்கு வைப்பதற்காக கல்வி அமைச்சுக்கு ரூ. 9,829 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(v) ஐக்கிய அமெரிக்காவின் நன்கொடையாக இலங்கை விமானப் படைக்குக் கிடைக்கப் பெற்றுள்ள 02 விமானங்களின் பெறுமதியைக் கணக்கு வைப்பதற்காகவும், வரி செலுத்துவதற்காகவும் இலங்கை விமானப்படைக்கு ரூ. 8,331 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(vi) அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவை செலுத்துவதற்காக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ரூ. 1,400 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(vii) கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்குரிய நிதிசட்ட ஆலோசனைகர்களுக்கு மத்திய வங்கியால் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளை ஈடுசெய்வதற்காக நிதி அமைச்சுக்கு ரூ. 3,213 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்காக

(viii) சீன அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறியளவிலான மீனவர்களுக்கான சலுகைகளை வழங்குவதற்காக கிடைக்கப்பெற்றுள்ள உதவிகளைக் கணக்கு வைப்பதற்காக கடற்றொழில் அமைச்சுக்கு மேலதிக ஒதுக்கீடு செய்வதற்காக தேசிய வரவு செலவுத் திணைக்களத்திற்கு ரூ. 1,533 ஒதுக்கீடு செய்தல்

(ix) ஜப்பான் அரசின் நன்கொடையாக சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குக் கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருள் தொகையின் பெறுமதியை கணக்கு வைப்பத்தல் மற்றும் ரூ. 5225.5 மில்லியன் சுங்க வரியினை செலுத்த சுகாதார அமைச்சுக்கு மேலதிக ஒதுக்கீடாக வழங்க தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு ரூ. 10,826 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(x) பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக ஒரு மாணவனுக்காக நாளொன்றுக்கு செலவாகும் 85/- ரூபாவை 110/- ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்திற்கு ரூ. 1,800 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்

(xi) இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சொத்துக்களை புனரமைப்புச் செய்வதற்கான நட்டஈடு செலுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதியொதுக்கீட்டுக்கு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்திற்கு 400 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்தல்

(xii) சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உணவுப் பானங்களுக்கான செலவு அதிகரித்துள்ளமையால் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குத் தேவையான மேலதிக நிதியொதுக்கீட்டுக்கு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்திற்கு ரூ. 1,400 மில்லியன் ஒதுக்கீடு செய்தல்


3. உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்கான அரிசி இறக்குமதி செய்தல்

உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கின்ற போக்குக் காணப்படுவதால் தற்போது நிலவுகின்ற அரிசித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய, காலநடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சருடன் இணைந்து ஏற்புடைய தரப்பினர்களைக் கேட்டறிந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கோரியுள்ளார். அதற்கிணங்க, சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


4. டீசல் (0.05% M.S) 04 கப்பல் தொகையைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

2024.12.15 ஆம் திகதி தொடக்கம் 2025.06.14 வரையான காலப்பகுதியில் டீசல் (0.05% M.S) 04 கப்பல்தொகையைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, 06 விலைமனுதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்தள்ளனர். குறித்த விலைமனுதாரர்களை மதிப்பீடு செய்த பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய குறித்த பெறுகையை சிங்கப்பூரின் பீபீ எனர்ஜி (ஏசியா) பிறைவெட் லிமிட்டட் இற்கு வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


5. 2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரைக்கும் அரச பணிகளையும் மற்றும் அரச கடன் சேவைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்காக “நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம்” (Vote on Account) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2024.11.21 அன்று புதிய பாராளுமன்ற கூடினாலும், 2025 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசியல் யாப்பில் விதிக்கப்பட்டுள்ள படிமுறைகளைக் கையாள்வதற்குப் போதியளவு நேரம் இல்லை. அதனால், 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 23(1) உபபிரிவில் குறிப்பிட்டவாறு 2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதகாலப்பகுதிக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்வதற்காக “கணக்கின் மீதான வாக்குப்பணம்”(Vote on Account) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.


அதற்கமைய, அரச மீண்டெழும் செலவுகள், மூலதனச் செலவுகள், அரச கடன் சேவைகள் மற்றும் கடன் மீள்கட்டமைப்புக்கான செலவுகள் உள்ளடங்கிய 2025 ஆண்டுக்கான 04 மாத காலத்திற்கு “நிதியொதுக்கீட்டுக் கணக்கின் மீதான வாக்குப்பணத்தை” தயாரிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


6. தேர்தலுக்கு முன்னரான (Pre Election) வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கை – 2024 மற்றும் ஆண்டுக்கான மத்தியகால அரச நிதிநிலை அறிக்கை – 2024

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 52 ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவைப்படுகின்ற பிரகடனம் அல்லது கட்டளையின் வெளியீட்டிலிருந்து மூன்று கிழமைகளினுள் நாட்டின் நிதிநிலை மீதான தகவல்களை உள்ளடக்கிய தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கையை திறைசேரி செயலாளர் பொதுமக்களுக்கு வெளியிடல் வேண்டும். குறித்த அறிக்கை 2024.10.14 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 50ஆம் பிரிவின் பிரகாரம் அரசின் நிதிச் செயல்நுணுக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி மூலோபாயத்தினை ஒப்பிட்டு அரசாங்கத்தின் மத்திய ஆண்டு நிறைவேற்றுகையை மதிப்பீடு செய்வதற்குப் பொதுமக்களுக்கு அடிப்படையொன்றை வழங்குவதற்காக மத்தியகால நிதிநிலை அறிக்கை குறித்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் இறுதித் தினத்தில் அல்லது குறித்த ஆண்டின் நிதியொதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி 10 மாதகாலம் கடந்த பின்னர் அல்லது இவ்விரண்டு தினங்களின் பின்னர் தொடர்ந்து வரும் தினத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பொதுமக்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.


குறித்த அறிக்கையானது 2024.10.31 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேர்தலுக்கு முன்னரான வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கை – 2024 மற்றும் ஆண்டுக்கான மத்தியகால அரச நிதிநிலை அறிக்கை – 2024 பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


7. 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் சமர்ப்பிக்கப்படும் அரச நிதிச் செயலாற்றுகை தொடர்பான கூற்று – 2024 மூன்றாம் காலாண்டு

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 53(1) ஆம் பிரிவின் பிரகாரம், குறைந்தபட்சம் காலாண்டு அடிப்படையில் நிதி விடயதான அமைச்சர் அரச அரசிறை மற்றும் செலவினங்கள் உள்ளடக்கிய நிதிச் செயலாற்றுகை அறிக்கையை ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் 45 நாட்களுக்குப் பிந்தாமல் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அமைச்சரவையைத் தெளிவூட்டிய பின்னர், நிதி விடயதான அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படல் வேண்டும்.


அதற்கமைய, 2024.09.30 ஆம் திகதியில் முடிவடையும் மூன்றாம் காலாண்டுக்கான அனைத்து விசேட செலவின அலகுகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் மூலமாக அறிக்கையிடப்பட்ட திரட்டு அரசிறை வருமானங்கள் மற்றும் செலவினங்கள் உள்ளடக்கிய நிதிச் செயலாற்றுகை அறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


8. அரச பிணைமுறிகளின் நிலைபேற்றுத் தன்மையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்காக நாட்டுக்கான பன்னாட்டுப் பிணைமுறிகள் (International Sovereign Bonds) மீள்கட்டமைப்பை நடைமுறைப்படுத்தல்

2024 ஜூன் மாதத்தில் இலங்கை அரசால் பிரதான இருபுடை கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ கடன்வழங்கல் குழு (OCC) உறுப்பினர்களுடன் கடன் மீள்கட்டமைப்புத் தொடர்பான இறுதி உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. 2024 செப்ரெம்பர் மாதத்தில் கொள்கை ரீதியாக ரூ. 14.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணைமுறிகளை மீள்கட்டமைத்தல் தொடர்பாக சர்வதேச முதலீட்டாளர்களின் முகவர் குழுவான பிணைமுறிதாரர்கள் (AdHoc Bond Holders) சமகாலக் குழு மற்றும் இலங்கையின் உள்நாட்டு பிணைமுறிதாரர்களின் கூட்டு (Local Consortium of Srilanka) உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், நாட்டுக்கான சர்வதேச பிணைமுறிதாரர்களுடன் அடிப்படை உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.


அதற்கிணங்க, இலங்கையின் சர்வதேச பிணைமுறிக் கடன் கட்டமைப்பு, முதலீட்டாளர்கள் மற்றும் செலுத்தல் தொடர்பான விடயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுப்பாய்வின் பின்னர், மற்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த கடன் வசதிகளின் கீழான ஏற்பாடுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வரைகூறுகளுக்கு (Parameters) அமைய, தற்போது நிலவுகின்ற பிணைமுறிகளுக்கான புதிய பிணைமுறிப் பரிமாற்றங்கள் செய்வதற்கான வழிவகைகளை இலங்கையின் சர்வதேச பிணைமுறி மிள்கட்டமைப்புக்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.