ஜனாதிபதியினால் 4 சம்பிரதாயங்கள் ரத்து, பாராளுமன்றத்தில் என்ன நடைபெறப் போகிறது..?
நாளை மு.ப 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், பாராளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.
முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதுடன், அரசியலமைப்பின் 64 (1) பிரிவு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4,5 மற்றும் 6 இன் ஏற்பாடுகளுக்கு அமைய சபாநாயகர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவுசெய்தல் என்பன இடம்பெறும். முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பது விசேடமானதாகும்.
இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய மு.ப 11.30 மணிக்கு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.
இதற்கு அமைய மு.ப 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர். மு.ப 11.10 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து மு.ப 11.15 மணிக்கு பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் ஜனாதிபதியின் வருகை இடம்பெறும்.
அதன்படி மு.ப 11.20 மணியளவில் சபாநாயகர், பாராளுமன்றச் செயலாளர்நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களைப் பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.
இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 11.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.
சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E-Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் உதவி - இலங்கைப் பாராளுமன்றம்
Post a Comment