முன்னாள் பிரதியமைச்சருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை உறுதியானது
2007 டிசம்பர் 01ஆம் திகதிக்கும் 26ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் அம்பாறை ஜி. புஞ்சி நோனா என்ற பெண்ணின் மகனுக்கு, இலங்கை மின்சார சபையில் தொழில் வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி சாந்த பிரேமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது, பிரதிவாதி ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பணிபுரிந்ததோடு, அவர் ஒரு சட்டத்தரணியாகவும், தொழில் ரீதியாக பிரதி அமைச்சராகவும் செயற்பட்டார்.
நீண்ட விசாரணையின் பின்னர், 2017 நவம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் குறித்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இதன்படி, பிரதிவாதிக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்த உயர்நீதிமன்றம், மேற்படி அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்குவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த சாந்த பிரேமரத்ன, உயர் நீதிமன்ற விசாரணையில் தமக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் உயர் நீதிமன்ற நீதிபதியால் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் சாந்த பிரேமரத்ன தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரம் ரத்னம் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தீர்ப்பை அறிவித்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி கொழும்பு மேல் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை சரியான முறையில் அறிவித்துள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்த தண்டனை மற்றும் அபராதம் உறுதி செய்யப்படுவதாகவும், அதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment