அம்பாறை மாவட்டத்தில் 3 ஆசனங்களை பெறுவோம் - றமீஸ் முஹிடீன்
தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 03 ஆசனங்களை பெறும் என பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் றமீஸ் முஹிடீன் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம் ஒலுவிலில் வேட்பாளர் எம்.எஸ். சத்தார் தலைமையில் நடைபெற்றது, இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வேட்பாளர் றமீஸ் முஹிடீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி எதிர்காலத்தில ஒரு பலம் பொருந்திய கட்சியாக திகழும். தேசிய மக்கள் சக்தியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் குறிப்பாக இளைஞர், யுவதிகள் சேர்ந்து எமது கரத்தை பலப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சேவையை மேற்கொள்ளக்கூடிய ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை ஆளும் கட்சியாக இருக்கும் ஒரு தேசிய கட்சி வழங்கியிருப்பது நமது பிரதேசத்திற்கும் நமது சமூகத்திற்கும் வழங்கப்பட்ட ஒரு கௌரவமாகும்.
கடந்த 76 வருடங்களாக இந்த நாட்டை மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் அவர்களது தனிப்பட்ட அரசியல் அபிலாசைகளுக்காக நாட்டு மக்களிடையே இன மத மொழி ரீதியான பிரிவினைகளை தோற்றுவித்து சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை சீர்குலைத்தனர். இதனால் நாட்டில் தொடர்ச்சியாக ஒரு இன முறுகல் நிலைகாணப்படுவதும் ஆங்காங்கே அடிக்கடி வன்முறைகள் ஏற்படுவதும் நாட்டின் தேசிய சொத்துக்களும் பெறுமதி மிக்க மனித உயிரிகளும் இழக்கப்பட்டடு வந்துள்ளது.
அரசியலில் இலஞ்சம்,ஊழல் அதிகார துஸ்பிரயோகம் களவு வீண் விரயம் போன்றவை சாதாரண செயற்பாடுகளாக மாறிவிட்டன.ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கோடீஸ்வரர்களாக ஆடம்பர வாழ்க்கையில் இருக்க நாட்டின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் ஈடுபடும் மத்திய தர மற்றும் அடித்தட்டு மக்கள் தமது ஒரு வேளை உணவிற்கே போராடிக்கொண்டிருகின்றனர், இவ்வாறு இந்த நாட்டை ஒரு வங்குரோத்து நிலைக்கு இவ் அரசியல்வாதிகள் மாற்றியுள்ளனர்.
இந்த நிலையை முற்றாக மாற்றி புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நமது நாட்டு மக்கள் அநுர குமார திஸாநாயக்காவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பண்மையான மக்கள் தமது பெரும்பாண்மை பலத்துடன் மிகப்பெரிய வெற்றியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 21 கட்சிகள், 43 சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஒலுவில் நிருபர்)
Post a Comment