Header Ads



3 இலங்கையர்களுக்கு ரஷ்யாவில் ஏற்பட்ட அவலம்



யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த மூவரை கட்டாயத்தில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களை மீட்டு தருமாறும் உறவினர்கள்  இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சகோதரியிடம் செல்வதற்கு 60 இலட்ச ரூபாய் பணத்தினை செலுத்தி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரஷ்ய விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரஷ்ய நாட்டு இராணுவ தளபதியின் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள் என கூறப்பட்ட இளைஞனை முகவர் விமானம் ஏற்றியுள்ளார்.


ரஷ்ய விமான நிலையத்தில் இறங்கிய வேளை , குறித்த இளைஞனுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஆகிய மூவர் பிரான்ஸ் நாட்டுக்கு தம்மை அழைத்து செல்வார் என கூறப்பட்ட இராணுவ அதிகாரிக்காக காத்திருந்துள்ளனர்.


அங்கு வந்த இராணுவ அதிகாரி மூவரையும் அழைத்து சென்று கட்டாயமாக இராணுவ முகாமில் தங்க வைத்து , அவர்களுக்கு இராணுவ சீருடைகள் வழங்கப்பட்டு 15 நாள் கட்டாய இராணுவ பயிற்சி வழங்கி உக்ரைன் நாட்டு எல்லையில் கொண்டு இறக்கி விடப்பட்டுள்ளனர்.


அந்நிலையில் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் தமது நிலைமை தொடர்பில் தாயாருக்கு கூறியுள்ளதுடன் , ரஷ்ய இராணுவத்தில் இணைத்துள்ள படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னரே மூவரும் ரஷ்ய நாட்டு இராணுவத்தில் இணைக்கப்பட்ட விடயம் உறவினருக்கு தெரிய வந்துள்ளது.


இது தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் , தமது பிள்ளைகளை மீட்டு தருமாறு வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.