Header Ads



34 ஆவது கருப்பு 'அக்டோபர் தின நினைவேந்தல்' - ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

 


(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)


வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 34 வருடம் நிறைவடைந்ததையிட்டு, 34 ஆவது கருப்பு அக்டோபர் தின நினைவேந்தல் தொடர்பான ஊடக மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நீர்கொழும்பு சவுன்டர்ஸ் உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.


வடக்கிலிருந்து நீர்கொழும்புக்கு இடம் பெயர்ந்து  வசிக்கும் வடபுல முஸ்லிம்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.


எம்.எஸ். எம். ஜன்சிர், எம்.எஸ்.ஜினூஸ், நீர்கொழும்பு பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் நிர்வாக குழு செயலாளர் எம் . எம் . சுஹைபல் ஹாஜியார், மௌலவி நூருல் ஹஸன் ஆகியோர் அங்கே  தமது கருத்துக்களை தெரிவித்தனர்.


1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தாம் விடுதலைப் புலிகளால் வடபுலத்தில் இருந்து துரத்தப்பட்டதாகவும், புத்தளம் நீர்கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் 3500 குடும்பங்களைச் சேர்ந்த  பதினாறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  அன்று இடம் பெயர்ந்ததாகவும் வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் துரத்தப்படுவதை  விரும்பவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


தற்போது 500 குடும்பங்கள் வரை அங்கு மீண்டும் குடியமர்ந்த போதிலும், அவர்களுக்கான போதிய வசதிகள்  கொடுக்கப்படவில்லை எனவும் மேலும் 500 குடும்பத்தினர் வரை தமது இருப்பிடங்களுக்கு சென்று வாழ விரும்புவதாகவும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்துவார் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள்  தெரிவித்தனர்.





No comments

Powered by Blogger.